சென்னையை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம் காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களையும் சின்னாபின்னப்படுத்தியது. வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள முதல்கட்டநிதி நீங்கலாக நடிகர், நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளித்து வருகின்றனர்.
அவ்வகையில், ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் 25 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக அளித்துள்ளார். இதற்கிடையே, வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி சென்னையிலும் 23-ம் தேதி கோவையிலும் ‘நெஞ்சே எழு’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்த ஏ.ஆர். ரஹ்மான் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியை வெள்ளத்தால் பாதிக்கப்பப்பட்ட சென்னை வாசிகளுக்கு அர்ப்பணிப்பதாகவும், அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சென்னை மக்களின் நிவாரணத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.