வெள்ளத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்கு விவசாய அமைச்சு உலர் உணவு விநியோகம்

தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக வடமாகாணத்தில் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறை உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

6

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இப்போது பெய்து வரும் மழைகாரணமாக குளங்கள் நிரம்பியுள்ளதோடு, தாழ்நிலங்களில் குடியிருந்தவர்களிற் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியுள்ளனர். இவர்களில் மிகப்பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்கள் என்பதோடு தொடர்மழைகாரணமாக வேலைவாய்ப்பின்றியும் உள்ளனர். இதைக்கருத்திற் கொண்டு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறை அவசர நடவடிக்கையாக வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உலர் உணவுகள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக நேற்று வியாழக்கிழமை (25.12.2014) கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்கு உலர் உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை மகாவித்தியாலயம், புளியம் பொக்கணை நாகேந்திரா வித்தியாலயம், கரவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயம், தர்மபுரம் பொதுமண்டபம், முரசுமோட்டை அ.த.க. பாடசாலை, பரந்தன் ராகுலன் முன்பள்ளி, பன்னங்கண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, ஆனைவிழுந்தான் அ.த.க. பாடசாலை ஆகிய இடங்களில் தங்கியுள்ள ஆயிரத்துக்கு அதிகமான மக்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண உறுப்பினர் சு. பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேச சபைத் தலைவர் நா. வை. குகராஜா ஆகியோர் நேரடியாகச் சென்று பொதிகளை விநியோகித்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் குறிப்பிடுகையில்,

வடக்கு முதல்வரின் பணிப்பின் பேரில் எமது அமைச்சுக்கு உட்பட்ட உணவு வழங்கல் துறையால் அவசர வேலைத்திட்டமாக வெள்ளத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்கான உலர் உணவு விநியோகம் இடம்பெற்று வருகிறது. முதல்வரின் செயலகத்தால் ஏற்கனவே யாழ்மாவட்டத்துக்கான உலர் உணவு விநியோகம் கணிசமான அளவு இடம் பெற்றுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரிடமும் அவர்களது மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பால் இடம்பெயர்ந்துள்ளவர்களின் விபரங்களைச் சேகரித்துத் தருமாறு அவைத்தலைவரூடாகக் கோரியுள்ளோம். அதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் பாதிப்பு விபரங்களை உடனடியாக எங்களது அமைச்சுக்கு அறிவித்ததன் அடிப்படையில் உலர் உணவு விநியோகம் இடம்பெற்றுள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படங்களுக்கு

Related Posts