வெளிப்படைத் தன்மையற்ற விஞ்ஞாபனத்தை நம்பி எவ்வாறு வாக்களிக்க முடியும்? –சி.வி.விக்னேஸ்வரன்

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வாராந்தம் கேள்வி பதிலில், புதிய ஜனநாயக முன்னணியியன் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையின் இரு பிரதான கூட்டுக்கட்சிகளின் சிங்கள வேட்பாளர்கள் தமது 13 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து 5 கட்சிகளுடன் கூட்டாகப் பேசுவதற்கு தயாராக இருக்கவில்லை என்பதுடன் தேர்தல் விஞ்ஞாபனங்களை மாத்திரமே வெளியிட்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொருளாதார விடயங்கள் குறித்தே குறிப்பிடப்பட்டிருந்ததென்றும் இனப் பிரச்சினை குறித்து எந்த ஒரு தீர்வையும் அவர் முன்வைக்கவில்வையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும் என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒப்பீட்டளவில் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து சில நல்ல விடயங்களை உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆயினும் தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளான சுயநிர்ணய உரிமை, வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி, தேசிய இறைமை ஆகியவை குறித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இந்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் திருப்திகரமான ஒன்றாக அமையவில்லை என தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது வெளிப்படையாக எந்த ஒரு உறுதி மொழியையும் பெற்றுக்கொள்ளாமல் தமிழ் மக்கள் வாக்களித்து ஏமாற்றமடைந்தனர்.

இவ்வாறான நிலை நீடித்தால் காலக்கிரமத்தில் தமிழ் மக்கள் தங்கள் மாகாணங்களில் சிறுபான்மையினராக ஆகிவிடுவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மீண்டும் ஒருமுறை வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை நம்பி எவ்வாறு எமது மக்கள் ஆதரவு அளிக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

எனவே தாம் தீர்மானித்த தமது கட்சியின் முன்னைய நிலைப்பாடான, சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி தமது விரலால் சுட்டிக்காட்டுவதற்கான தார்மீக உரிமை தமக்கு இல்லை என்பதே கட்சியின் நிலைப்பாடென குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் ஜனநாயக உரிமையை மதிப்பதாக தெரிவித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன், யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வாகுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts