வெளிநாட்டு நாணயங்களில் வர்த்தகம் மேற்கொள்ள சுப்பர்மார்கெட்டுகள் அனுமதிக்கப்படும்

சுப்பர்மார்கெட்டுகள், குத்தகை மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் நாணயமாற்றுக் கட்டுப்பாட்டு அதிகாரியான பி.எச்.ஓ. சந்திரவன்ஸ நேற்று கூறினார்.உள்ளூரில் மாற்றப்படும் ஸ்ரேலிங் பவுண், அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்கள் மத்திய வங்கியை அடைவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 61 வெளிநாட்டு நாணய பரிமாற்று நிறுவனங்கள், வெளிநாட்டு நாணயங்களில் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும் அவை வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

அனுமதிக்கப்பட்ட நாணயபரிமாற்று நிலையங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்படவுள்ளதாக ஒரு வாரத்திற்குமுன் மத்திய வங்கி அறிவித்திருந்தது. மத்திய வங்கியிலுள்ள கட்டுப்பாட்டு அறையொன்றிலிருந்து இந்நிலையங்கள் கண்காணிக்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்நடவடிக்கை வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்திற்காக வருவதை தடுக்கிறது என தம்மை இனங்காட்ட விரும்பாத, அனுமதிபெற்ற நாணய பரிமாற்றுநர்கள் தெரிவித்திருந்தனர். தம்மை மத்திய வங்கி கண்காணிக்கிறது என வாடிக்கையாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என நாணய பரிமாற்றுநர்கள் கூறினர்.

நாணய பரிமாற்றுநர்கள் சிலர் வெளிநாட்டு நாணயங்களை மத்திய வங்கிக்கு அனுப்பாமல் அவற்றை விற்பனை செய்வதாக மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயகட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண் விசாரணைகளில் தெரியவந்ததாக சந்திரவன்ஸ கூறினார்.

இந்நிலையில் வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பான முறையான பதிவுகள் மேற்கொள்ளப்படுவதுடன் அந்நாணயங்கள் இறுதியில் மத்திய வங்கியை அடைவதை உறுதிப்படுத்துவதற்காக புகழ்பெற்ற சுப்பர்மார்க்கெட்டுகள், நிதி மற்றும் குத்தகை நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு நாணயங்களை வெளிநாடுகளுக்கு கடத்திச்செல்லும் பல முயற்சிகள் கடந்த சில மாதங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முறியடிக்கப்பட்டுள்ளன.

அனுமதிபெற்ற நாணய பரிமாற்றுநர்கள் 1.5 மில்லியன் ரூபாவை மத்திய வங்கியில் வைப்பிலிடுவதுடன் சேகரிக்கப்படும் வெளிநாட்டு நாணயங்களை 5 நாட்களுக்குள் மத்திய வங்கியில் வைப்பிலிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளனர்.

Related Posts