தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் இறுதிக்குழு நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.
தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் கண்காணிப்பாளர்கள் 29 பேரைக் கொண்ட குழுவே நேற்று இலங்கை வந்திருப்பதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலைதீவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் இப்ராஹிம் தா ஹித் இக்குழுவிற்குத் தலைமை தங்குகின்றார்.
அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த 9 பேர் ஏற்கனவே இலங்கை வந்திருப்பதுடன், அவர்கள் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பிக்கின்றனர். இவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று நடைபெறுகிறது. டொக்டர் ஜியோர்ஜ் அபெலா தலைமையிலான இந்தக் குழுவில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவும் உள்ளடங்குகின்றார்.
இது தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவினர் ஏற்கனவே இலங்கை வந்து சகல மாவட்டங்களிலும் தமது கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புத் தொடர்பான முதலாவது அறிக்கை தேர்தல் முடிந்து 48 மணித்தியாலத்தில் வெளியிடப்படும். பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை மூன்று மாதத்துக்குள் வெளியிடப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.