குவைத்தில் தொழில் புரியும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை பயன்படுத்தி பாரிய தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், இந்த மோசடி திட்டம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை நாங்கள் மிக தீவிரமானதாக கருதுகிறோம். எங்களுடைய அமைப்பை சேர்ந்தவர்களும் ஏனைய கண்காணிப்புஅமைப்புகளின் பிரதிநிதிகளும் தேர்தல் ஆணையாளரிடம் இது குறித்து தீவிரமாக ஆராய்ந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட மோசடியை தடுப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை வாக்களிக்க அனுமதிப்பதற்கு முன்னர் அவர்களுடைய கடவுச்சீட்டுகளை கோரவேண்டும் என தேர்தல் ஆணையாளரிடம் கேட்டுள்ளதாகவும் தென்னக்கோன் குறிப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆவணத்தில் குறிப்பிட்ட நபர் வெளிநாட்டிலிருந்தால் அதனை குறிக்குமுகமாக ஏ என குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்தே வாக்களிக்கலாம், எனினும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு இது குறித்து சந்தேகம் எழுந்தால் அவர்கள் கடவுச்சீட்டை காண்பிக்கவேண்டும் அல்லது தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வாக்குமூலத்தை சமர்ப்பிக்கவேண்டும் என பிரதிதேர்தல் ஆணையாளர் முகமட் தெரிவித்துள்ளார்.
இதேவளை குவைத்தில் பணிபுரியும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வாக்களிப்பதற்காக இலங்கைக்கு வருவார்கள் என அந்த நாட்டிற்கான இலங்கை தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.