வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் NRFC, RFC உள்ளிட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலுள்ள பணத்தை முன்கூட்டிய அனுமதி இல்லாமல் அனுப்ப முடியும் என இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் போது நாணயக் கட்டுப்பாட்டு தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் செய்யப்படுள்ளது.

அதேபோன்று வங்கிக் கணக்குகளில் இருந்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு நிகரான தொகையை மீளப்பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்தனர்.உலக பொருளாதார நிலைக்கு அமைய இலங்கை தொடர்பில் எதிர்காலத்தில் பின்பற்றப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் தொகையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts