வெலிக்கந்த முகாமில் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களை பார்வையிட்டனர்! இன்று கோத்தாவுடன் சந்திப்பு

யாழ். பல்கலை மாணவர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு யாழ். பல்கலை மூன்று பேராசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் நேற்று சென்று அவர்களைப் பார்வையிட்டதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரியரட்னம் உட்பட பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நான்கு மாணவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் நேற்று வியாழக்கிழமை சென்று அவர்களைப் பார்வையிட்டதாகவும், குறித்த மாணவர்கள் நால்வரும் அங்கு பாதுகாப்பாகவே இருக்கின்றனர் எனவும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இருப்பினும் அவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். பாதுகாப்பு தரப்பினரால் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அம்மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம் என அவர் கூறினார்.

மாவீரர் தினத்தன்றும் அதற்கு மறுதினமும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து 11 மாணவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 7 பேர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts