தேர்தலில் வாக்களிப்பதற்கு அநுராதபுரம், திருகோணமலை மற்றும் வவுனியா செல்லும் வெலிஓயா பகுதி மக்களை ஏன் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்தது என்பது தொடர்பில் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் இணைத்தலைமையில் கரைத்துரைப்பற்றுப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (03) மாலை தொடக்கம் இடம்பெற்றது.
இதன்போதே, அன்ரனி ஜெகநாதன் மேற்கொண்டு கேள்வி எழுப்பினார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
வாக்களிப்பதற்கு அங்கு செல்லும் வெலிஓயா வாசிகளுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும் நிதியில் இருந்தே நிதி செல்கின்றது. அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும் நிதியின் மூன்றில் ஒரு பங்கு, சில வேளைகளில் மூன்றில் இரண்டு பங்கு நிதிகூட அங்கு செல்கின்றன.
முல்லைத்தீவுக்கு கிடைக்கப்பெற்ற 5 அம்புலன்ஸ் வண்டிகளில் இரண்டை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வெலிஓயாப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு வழங்கினார்.
அத்துடன், சமுர்த்தித் திட்டத்தில் பெருமளவு நன்மைகள் வெலிஓயாப் பிரதேசத்திற்குச் செல்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே ஓட்டுசுட்டான், துணுக்காய், கரைத்துரைப்பற்று, மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு ஆகிய 5 பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. இருந்தும் அவற்றுக்கு குறைந்தளவு நிதியே அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒதுக்கப்படுகின்றன. ஆனால், வெலிஓயாப் பிரதேசத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கப்படுகின்றது என்றார்.
இதற்குப் பதிலளித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம்,
பொதுஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்புரையின் கீழ், 2011 ஆம் ஆண்டு வெலிஓயாப் பிரதேச செயலகம் முல்லைத்தீவுப் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
அத்துடன், அபிவிருத்திப் பணிகளின் நிதி தொடர்பிலும் பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுத் தீர்மானித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.