வெலிஓயாவால் கோபமடைந்த முதலமைச்சர் சி.வி

வர்த்தகமானியில் குறிப்பிடப்படாத ஒரு பிரதேசத்தை, பிரதேச செயலகமாக உருவாக்கி, அதற்கு சகல உதவிகளையும் எவ்வாறு வழங்கி வருகின்றீர்கள் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் வெலிஓயா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

vickneswaran-vicky-Cm

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், வடமாகாண முதலமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் கரைத்துரைப்பற்று மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்றது.

இதன்போது, வெலிஓயா பிரதேசம் தொடர்பில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

வெலிஓயாவிற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததுடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கியமை சட்டவிரோதச் செயல்கள் ஆகும். பதிவில்லாத பிரதேச செயலகத்திற்கு எவ்வாறு உதவிகள் செய்ய முடியும் என முதலமைச்சர் மேலும் கேள்வி எழுப்பினார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனுப்பிய ஒரு கடிதத்தைக் கொண்டு எவ்வாறு நீங்கள், வெலிஓயாப் பிரதேசத்திற்கு இத்தனை உதவிகளைச் செய்ய முடியும். அவ்வாறு செய்தது தவறு என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அப்பிரதேசத்தில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன என அமைச்சர் ரிஷக்த் வினாவினார்.

அதற்கு தெரியாது என்ற பதிலை மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்துக்கு காணிகள் தரமாட்டோம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுப்பிளவு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியும், பொதுமக்களுக்குச் சொந்தமான 7 ஏக்கர் காணியுமாக மொத்தம் 17 ஏக்கர் காணியில் இராணுவம், முகாம் அமைத்துள்ளது என மக்கள் பிரதிநிதியொருவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் ரி.பிருந்தாபன், மேற்படி காணியிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றித் தரும்படி மக்கள் என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய அந்த இராணுவத்தினரை வெளியேறும்படி கோரியிருந்தேன்.

ஆனால், அதற்கு இராணுவத்தினர் இதுவரையில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. மேலும், காணி சுவீகரிப்பதாக எவ்வித அறிவித்தல்களையும் இராணுவத்தினர் விடுக்கவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து, அங்கிருந்த இராணுவ சிவில் அதிகாரியிடம், ஏன் அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதற்கு ஆவனம் செய்யவில்லை என முதலமைச்சர் வினவினார்.

அதற்கு பதிலளித்த இராணுவ அதிகாரி, இராணுவத்துக்காக மேற்படி காணியை சுவீகரிக்கும் நோக்கம் இருப்பதாக தெரிவித்தார்.

இதனால், கோபமடைந்த முதலமைச்சர், இராணுவத்திற்குக் காணிகள் எப்போதும் நாங்கள் தரமாட்டோம். வடமாகாணத்தில் பொதுத் தேவைகளைத் தவிர்ந்த வேறு எந்தத் தேவைகளுக்கும் காணிகள் சுவீகரிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் எனக் கூறினார்.

மாகாண நிதியை மத்திய அரசு ஏப்பம் விடுகின்றது

வடமாகாணத்துக்கு 5,831 மில்லியன் ரூபாவை ஒதுக்கியதாக பிரசாரம் செய்து, எமக்கு 1,876 மில்லியன் ரூபாவை மட்டும் தந்துவிட்டு எஞ்சிய நிதியை மத்திய அரசாங்கம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து செலவு செய்து வருகிறது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பைப் பெறாமல் தான்தோன்றித்தனமாக அவற்றைச் செலவு செய்ய முற்படுகின்றது. எமது மதிப்பிற்குரிய வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா யதார்த்தத்திற்குப் புறம்பான முறையில் ஊடகங்களுக்கு செய்திகளை விடுக்கின்றார்.

இது உண்மைக்குப் புறம்பானது. எதிர்கட்சித் தலைவர் போன்று நாமும் அண்டி வாழ ஆசைப்பட்டால் கட்டாயம் அவர் கூறுவது போல் எம்மாலும் முடியும். நாம் எமது தனித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்கவே விரும்புகின்றோம்.

இவை யாவும் அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் ஆதங்கங்களை, அபிலாஷைகளை, ஆசைகளை, எதிர்பார்ப்புக்களை அடியோடு சாய்த்து, தமது கரவான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மெருகூட்ட விளைவதை எடுத்துக் காட்டுகின்றன.

இதற்கு எம்மவர்களில் சிலர் ஒத்தூதுவது வருத்தத்தைத் தருகின்றது. எனவே, தான் எமது அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் சர்வதேச நாடுகளுடன் எமது பிரச்சினைகளை அலசி ஆராய வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

நாம் வெளி நாடுகளுடன் பேச விளைவது உள்நாட்டில் எமது குரலுக்கு மதிப்பில்லை என்ற காரணத்தினாலே தான் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்’ என முதலமைச்சர் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கஞ்சியாவது குடித்தோம்

யுத்த காலத்தில் கஞ்சியாவது குடித்த நாங்கள், தற்போது வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி காரணமாக கஞ்சிகூட குடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என முல்லைத்தீவு மீனவர்களின் பிரதிநிதியொருவர் கூறினார்.

முல்லைத்தீவின் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் வெளிமாவட்ட மீனவர்கள் ஈடுபடுகின்றனர். அத்துடன், அத்துமீறி முல்லைத்தீவில் குடியேற்றப்பட்ட சிங்கள மீனவர்களும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் மீன் வளங்கள் அழிவடைந்து, அதனையே நம்பியிருக்கும் நாங்கள் தொழில் இன்றித் தவிக்கின்றோம். மேலும், இராணுவத்தினரின் பாதுகாப்புடன் கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கையில் வெளிமாவட்ட மீனவர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலட்டைகள் பிடிப்பதால் எங்கள் கடல் வளம் அழிவடைந்து செல்கின்றது. அத்துடன் சிறுகடல் பகுதிகளில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையால், அப்பகுதியில் காலங்காலமாக மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர், ‘அத்துமீறிய மீன்பிடி மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வருவதாக’ தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், ‘மேற்படி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு 15 பேர் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளது. மேலும் இக்குழுவில் மத்திய மீன்பிடி அமைச்சின் பிரதியொருவரும் உள்ளடங்கியுள்ளதாக’ தெரிவித்தார்.

மாங்குளத்தில் வடமாகாண சபைக்கட்டிடம் அமைக்க ஆய்வு

வடமாகாண சபையின் கட்டிடத் தொகுதியை மாங்குளத்தில் அமைப்பது தொடர்பாக கொரிய நாட்டு நிபுணர்கள் குழுவொன்று ஆய்வு நடத்தி வருவதாகவும், அந்த ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றதும் தீர்மானம் எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆய்வுக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், அதில் சாதகமாகக் குறிப்பிட்டிருந்தால் மாங்குளத்தில் கட்டிடத் தொகுதி அமைக்கப்படும். இருந்தும், இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தல் தற்போது வழங்க முடியாது என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts