20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று பாகிஸ்தான்–ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்–தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்–10 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு முக்கியமான லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
குரூப்2 சுற்றில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவுடன் மொகாலியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகிறது. வங்காளதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு அதன் பிறகு இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் மண்ணை கவ்வியதால் அரைஇறுதி வாய்ப்பு போய் விட்டது. ஆனாலும் பாகிஸ்தானுக்கு நூலிழையில் இன்னும் அரைஇறுதி வாய்ப்பு ஒட்டிக்கொண்டிருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக்கில் இந்தியாவை வீழ்த்த வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்–ரேட் அடிப்படையில் ஒரு அணி அரைஇறுதிக்கு தேர்வாகும். ரன்ரேட்டில் பாகிஸ்தான் சிறந்த நிலையில் இருப்பதால் இவை எல்லாம் சாதகமாக அமைந்தால் பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். இந்த உலக கோப்பையுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடிக்கு இதுவே கடைசி ஆட்டமாக அமையவும் வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கும் இது கட்டாயம் வென்றாக வேண்டிய ஆட்டமாகும். அதிகமான அதிரடி வீரர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மிகுந்த நம்பிக்கையுடன் ஆயுத்தமாகியுள்ளது. ஆரோன் பிஞ்சுக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.
தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா, பாகிஸ்தானில் பிறந்தவர். அவர் முதல் முறையாக தனது சொந்த அணியை எதிர்கொள்ள இருப்பது சுவாரயஸ்மான ஒரு அம்சமாகும். இவ்விரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5–ல் ஆஸ்திரேலியாவும், 7–ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆகியுள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
ஆஸ்திரேலியா: வாட்சன், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஜேம்ஸ் பவுல்க்னெர், பீட்டர் நெவில், ஜான் ஹேஸ்டிங்ஸ், நாதன் கவுல்டர்–நிலே, ஆடம் ஜம்பா.
பாகிஸ்தான்: ஷர்ஜீல் கான், அகமது ஷேசாத், காலித் லத்திப், உமர் அக்மல், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது, அப்ரிடி (கேப்டன்), இமாத் வாசிம், முகமது இர்பான் அல்லது வஹாப் ரியாஸ், முகமது சமி, முகமது அமிர்.
மற்றொரு ஆட்டம்
இரவு 7.30 மணிக்கு மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் (குரூப்1) வெஸ்ட் இண்டீஸ்– தென்ஆப்பிரிக்கா அணிகள் மல்லுகட்டுகின்றன.
ஏற்கனவே இங்கிலாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்பில் இருக்கிறது. தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பேட் செய்ய வராத அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் உடல்தகுதி பெற்று அசத்த காத்திருக்கிறார்.
2 ஆட்டத்தில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவுக்கு இது வாழ்வா–சாவா மோதலாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும். காயத்தால் ஆல்–ரவுண்டர் டுமினி இந்த ஆட்டத்தில் ஆடாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பாங்கிசோ இடம் பெறுவார்.
நாக்பூர் ஆடுகளம், முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சின் ஆதிக்கம் கொண்டது. இதனால் இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் தென்ஆப்பிரிக்க அணியில் இம்ரான் தாஹிரும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பத்ரீயும் பிரதான அஸ்திரமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டிவில்லியர்ஸ், ரோசவ் அல்லது பெஹர்டைன், டேவிட் மில்லர், டேவிட் வைஸ் அல்லது கிறிஸ் மோரிஸ், கைல் அப்போட், ரபடா, ஆரோன் பாங்கிசோ, இம்ரான் தாஹிர்.
வெஸ்ட் இண்டீஸ்: கெய்ல், ஜான்சன் சார்லஸ், பிளட்சர், சாமுவேல்ஸ், தினேஷ் ராம்டின், ஆந்த்ரே ரஸ்செல், வெய்ன் பிராவோ, டேரன் சேமி (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், பத்ரீ, சுலிமான் பென்.
தென்ஆப்பிரிக்கா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 6–ல் தென்ஆப்பிரிக்காவும், 3–ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன.
‘‘கடந்த இரு ஆட்டங்களை விட நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆட வேண்டும். எங்களது 100 சதவீத திறமை இன்னும் வெளியாகவில்லை. அதில் கவனம் செலுத்துகிறோம்’’
–ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்
‘‘எங்கள் அணிக்குள் பிளவு இருப்பதாக வெளியான தகவல்கள் என்னை பொறுத்தவரை அடிப்படை ஆதாரமற்றவை. இதனால் தான் நாங்கள் பின்னடைவை சந்தித்து வருவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2009–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையின் போது எங்கள் அணியில் இடம் பிடித்த 6 வீரர்கள் ஒருவர்கொருவர் பேசிக்கொள்ளமாட்டார்கள். அதனை சமாளித்து அந்த உலக கோப்பையை வென்று சாதித்தோம் என்பதை நினைவு கூர விரும்புகிறேன்’’
–பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்
‘உலக கோப்பையை வெல்ல மொத்தம் 6 படிக்கட்டுகளை கடக்க வேண்டி இருக்கிறது. இதில் 2 படியை (2 லீக் ஆட்டம்) தாண்டி விட்டோம். இன்று இன்னொரு படியை கடந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே எங்களது இலக்கு’.
–வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி.
‘முதல் நாளில் நாக்பூரில் நாங்கள் பயிற்சி செய்த போது ஆடுகளம் உலர்ந்து காணப்பட்டது. அதற்கு ஏற்ப எங்களை தயார்படுத்த மாற்றிக்கொண்டோம். ஆனால் இப்போது ஆடுகளத்தன்மை கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனாலும் சுழற்பந்து வீச்சு அதிகமாக எடுபடுவதற்கே வாய்ப்பிருக்கிறது’.
–தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ்.