பொதுமக்களின் ஏகோபித்த கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருப்பதனால் எமது கூட்டமைப்பு வடமாகாண சபைத்தேர்தலில் வெல்லும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை’ என்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்திற்கான வேட்பு மனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
‘பலவருட காலமாக மக்களின் ஆதரவினை பெற்று வந்த கட்சி என்ற வகையில், எமது கட்சி இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியீட்டும்.
13 ஆவது திருத்தத்தினை எந்தவளவிற்கு நாங்கள் நடைமுறைப்படுத்த போகின்றோம் என்பதையே உங்களின் ஆதரவு வலியுறுத்துகின்றது’ என்றும் அவர் கூறினார்.
‘பொதுமக்கள் ஆதரவு கிடைத்தால் 13 ஆவது திருத்தத்தில் போதுமானளவு மாற்றத்தினை கொண்டு வரபார்க்கின்றோம். 13 ஆவது திருத்தத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றோம்’ என்றும் அவர் கூறினார்.
‘அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டால், அது பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அது தொடர்பில் பின்னர் பார்ப்போம். அத்துடன் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அதேவேளை உங்களுடைய ஒத்துழைப்பு எமது ஒற்றுமையையும் இந்த தேர்தலின் மூலம் எந்தளவிற்கு எடுத்து காட்டுகின்றோமோ அந்தளவிற்கு 13 ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த உதவியாக இருக்கும்’ என்றார்.
தொடர்புடைய செய்தி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்