எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாண சபைக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று அரசாங்க கட்சிகள் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை யாழ்.கொழும்புத்துறைப் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் பொது மக்களிடம் அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
சில இடங்களில் வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என்றும் வெற்றியின் சின்னம் வெற்றிலை என்றும் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரது இச்செயற்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இம்முறை தேர்தலில் இராணுவத்தினர் பாரிய மோசடிகளை மேற்கொள்ளப் போகின்றனர் என்பதற்கான ஆரம்ப புள்ளியாக இராணுவத்தினரது பிரச்சார நடவடிக்கைகள் உள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை
படைப்பிரிவுகள் வெளியேறிய முகாம்களுக்கு மூடுவிழா! பொதுமக்களின் வீடுகளை கையளிக்க ஏற்பாடு
511வது பிரிகேட் படைமுகாம் மற்றும் 512வது பிரிகேட் படைமுகாம்களே மூடப்பட்டு அப்படைமுகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படவிருக்கின்றன.
இந்த படைமுகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் வீடுகளும் காணிகளும் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றன.
இதற்கான நடவடிக்கைகளை படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 511வது, 512வது படைமுகாம்கள் அமைந்திருந்த வீடுகள் குறித்த பிரிவு இராணுவ அதிகாரிகளால் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளைய தினம் நடைபெறவுள்ளது.
இதன்படி 511வது படைமுகாம்கள் இருந்த ஊரெழு, அச்செழு பகுதி பொதுமக்களின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
512 வது படைமுகாம்கள் இருந்த கொழும்புத்துறை, சுவாமியார் வீதி மற்றும் அரியாலை பகுதியிலுள்ள பொதுமக்களின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு அன்றைய தினம் அரியாலையிலுள்ள 512வது படைமுகாமிலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.