வெயில் காலத்தில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் நிலவும் உச்ச வெயில் மக்களை அச்சத்தில்
ஆழ்த்தியுள்ளது.

இதன் காரணமாக மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சில கட்டாய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வெயிலினால் எமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் ஏற்படும் சாதாரண மாற்றங்களிலிருந்து (பருக்கள்) வெப்ப அதிர்ச்சி எனப்படும் பாரதூரமான நோய் வரை வெயிலினால் ஏற்படும் தாக்கம் விரிவடைந்துள்ளது.

வெப்ப அதிர்ச்சி மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. அல்லது எமது மனித உடலின் முக்கிய அங்கங்களான இதயம், சிறு நீரகம், நுரையீரல் போன்றவற்றை செயலிழக்கச் செய்யக் கூடியது. வெப்ப அதிர்ச்சியானது எமது உடல் நீண்ட நேரம் உயர் வெப்ப நிலைக்கு ஆளாவதன் காரணமாக, எமது உடலிலுள்ள வெப்பநிலையைச் சீராக்கும் மையம் பாதிப்படைகிறது. இது எமது உடலில் கட்டுப்பாடற்ற உயர்வெப்ப நிலை ஏற்படுவதால் ஏற்படுகின்றது. இந்த நிலையானது அனேகமான நேரங்களில் நீரிழப்பு உடன் சார்ந்தே ஏற்படுகின்றது.

இதன் அறிகுறிகளாகத் தலைச்சுற்று, தாங்கமுடியாததலைவலி,தலைப்பாரம், அதிகரித்த வெயிலிலும் வியர்வையின் அளவு குறைவடைதல் தோல் ஈரலிப்பற்றதாக மாறுதல், தசைப்பிடிப்பு, வாந்தி, வலிப்பு, மனக்குழப்பம், மன தின் ஒருநிலையற்றதன்மை மற்றும் தன்னிலை மறத்தல் ஆகியன காணப்படுகின்றன.

வெப்ப அதிர்ச்சியானது 4 வயதிலும் குறைந்த குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், 65 வயதிலும் கூடியவர்கள், இருதய மற்றும் சிறுநீரகநோய் உள்ளவர்கள், அதிகரித்த அல்லது குறைந்த உடல்நிறை உடையவர்கள், உயர் குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு நோய் உடையவர்கள், அதிகளவிலான மதுபாவிப்பவர்களை அதிகளவில் தாக்கு கின்றது.

எனவே நாம் அனைவரும் இந்த அதிகரித்த வெயிலின் தாக்கத்திலிருந்து எம்மையும் மற்றவர்களையும் பாது காக்கச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும்.

அந்த நடவடிக்கைகளாவன:

இலேசான ஆடைகளை அணிதல் மற்றும் வெளியிடங்களுக்குச் செல்லும் போது தொப்பி மற்றும் குடை என் பவற்றைப் பயன்படுத்துதல், வெளியே செல்லும்போது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க கறுப்புக் கண்ணாடி அணிதல், அதிகளவிலான நீர் மற்றும் பானங்களை அருந்துதல், பிரதானமாக உடலில் ஏற்படும் நீரிழப்பைத்தடுப் பதற்கு தினமும் குறைந்தது 8 குவளை தண்ணி அல்லது பழச்சாறு அருந்த வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும் போது அல்லது வெளியிடங்களில் வேலை செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பதாகவே நீர்/ பானம் அருந்த வேண்டும். அத்துடன் அவ்வாறு வேலை செய்யும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை தண்ணித் தாகம் இருந்ததோ இல்லையோ சிறிதளவு நீர் அருந்த வேண்டும்.

அத்துடன் இயலுமானவரையில் காலை மற்றும் மாலை நேரப் பொழுதுகளில் வேலைகளைச் செய்தல். அதாவது வெயில் நேரங்களில் வேலை செய்வதைத் தவிர்த்தல். ஆகவே தற்போது நிலவும் உச்ச வெயிலினால் ஏற்படும் தாக்கங்களை எம் மனதில் கொண்டு இயன்றவரை எம்மைப் பாதுகாப்போம்.

நிரூஷிகா சோதிநாதன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ்.போதனா வைத்தியசாலை.

Related Posts