வெப் சீரிஸ் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கொரியன் சீரிஸ் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கிம் ஜொங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்துவரும் வடகொரியாவில் இன்டர்நெட், சமூக வலைதளங்கள் என எதுவும் கிடையாது.

கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய குறைவான டிவி சேனல்கள் மட்டுமே இன்றும் இயங்கி வருகின்றன. இதனால், சீனா மற்றும் தென் கொரியாவின் சினிமா, வெப் சீரீஸ்களின் சிடிக்களை சீன எல்லையின் வழியாக மறைமுகமாகக் கொண்டுவந்து அதை மக்கள் வாங்கிப் பார்ப்பார்கள்.

இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்விதமாக அதிபர் கிம் ஜொங்-உன் வெளிநாட்டு படங்கள் மற்றும் வெப்-சீரீஸ்களைப் பார்க்க சமீபத்தில் தடை விதித்தார்.

மீறிப் பார்ப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சிறைவாசம் மற்றும் அதை அதிக அளவில் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதை கண்காணிக்கத் தனிக்குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் பல கொரியன் சீரிஸ், ஹாலிவுட் திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது.

கண்காணிப்புக் குழுவிடம் சிக்கிய அந்த இரு சிறுவர்களை அதே நகரத்தில் உள்ள ஒரு விமானநிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் ஒக்டோபரில் நடந்ததாக கூறப்படும் நிலையில், ஆனால் இது பற்றிய தகவல்கள் கடந்த வாரம்தான் வெளிவந்தன. வட கொரியாவின் இச்செயலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அந்நிய நாட்டு கலாசாரங்கள் நாட்டுக்குள் வேரூன்றிவிட்டால் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனநிலை உருவாகிவிடும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை கண்டிப்புடன் செயல்படுத்தி வருகிறார் அதிபர் கிம் ஜாங் உன்.

கடந்தாண்டு, அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை, கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு 11 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என வடகொரியா அறிவித்திருந்தது.

அந்த காலகட்டத்தில், குடிமக்கள் சிரிக்கவோ, ஷாப்பிங் செய்யவோ அல்லது மது அருந்தவோ அனுமதிக்கப்படவில்லை.

சமீபத்தில் இறுக்கமான ஜீன்ஸ்களையும், அயல்நாட்டு டீ- ஷர்ட்களையும் அணியக் கூடாது என செக் வைத்தார்.

அதேபோல், வெளிநாட்டு கலாசாரத்தை ஒட்டிய அலங்காரம், ஹேர் ஸ்டைல், மூக்குத்தி அணிவது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதித்தார்.

Related Posts