Ad Widget

வெக்கையைத் தணிக்கவே ஆசிரியர் குடித்தார்!!! ; முடாக்குடிகாரர் கிடையாது – நீதிமன்றில் சட்டத்தரணி விளக்கம்

“வெப்பம் அதிகமாக உள்ளதால் குளுமைக்காக ஆசிரியர் மது அருந்தினார். ஆனால் அவர் முடாக் குடிகாரர் இல்லை” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட ஆசிரியர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஒருவர் மன்றிடம் உரைத்தார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீதிப் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்து செய்யப்பட்டார்.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவர், நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன் போதே மூத்த சட்டத்தரணி இந்த விடயத்தை மன்றில் தெரிவித்தார்.

“ஆசிரியர் குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார். அவர் தீவகத்தில் பணியாற்றுகிறார். அன்றைய தினம் அதிக வெப்பநிலை காரணமாக குழுமைக்கு மது அருந்துவிட்டார். ஆனால் அவர் தினமும் மதுப்பழக்கமுள்ள குடிகாரர் இல்லை” என்று மூத்த சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

ஆசிரியர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அவருக்கு 7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்ததுடன் ஆயிரத்து 500 ரூபா அரச செலவும் அறவிடுமாறும் மன்று உத்தரவிட்டது.

அத்துடன், ஆசிரியரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை 9 மாதங்களுக்கு தடுத்துவைக்குமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டது.

இதேவேளை, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னூதாரணமாக ஒழுக்கமுடன் இருக்கவேண்டும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், இதேபோன்ற வழக்குகளில் முன்னர் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts