அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பையும் நலுவ விட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது.
இதன்படி டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.
அத்துடன், திட்டமிடப்பட்டுள்ள ஐந்து ஒருநாள் போட்டிகளில் முன்னதாக இடம்பெற்ற மூன்று ஆட்டங்களிலும் இரண்டில் அவுஸ்திரேலியாவும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஒருநாள் தொடரை இழப்பதைத் தவிர்க்க நேற்றய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், தம்புள்ளை விளையாட்டரங்கில் இலங்கை அணி நேற்றய போட்டியை எதிர்கொண்டது.
இதில், முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்த அணியின் ஆரம்ப வீரரான தனஞ்சய டி சில்வா அசத்தலாக ஆடி 76 ஓட்டங்களைக் குவித்தார்.
மேலும் மெத்தியூஸ் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க ஏனைய வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில், 50 ஓவர்கள் நிறைவில், இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்படி 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸதிரேலிய அணி 31 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 4 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை விளாசி வெற்றி வாகை சூடியுள்ளது.
அந்த அணி சார்பில் ஜோர்ச் பெய்லி 90 ஓட்டங்களையும், பின்ஞ் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
எனவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி, 1-3 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி, 4ம் திகதி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.