வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் ஊழல்!! : சுமந்திரன்

வடமாகாணத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் ஊழல் இடம்பெறுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் வீதிகளைப் புனரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் எவ்வித கேள்விகளும் கோரப்படாமல் வழங்கப்படுவதாக குற்றம்சுமத்தியுள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சுமந்திரன், பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு செய்யப்பட்டபோது, எனது வீட்டின் முன்பாக பல ஒப்பந்தகாரர்கள் வந்து நின்றார்கள். அவர்கள் என்னை நன்றாக கவனிப்பார்கள் என தெரிவித்ததுடன் மேற்படி வீதி புனரமைப்பு ஒப்பந்தத்தை தமக்கு பெற்றுக் கொடுக்குமாறு கேட்டார்கள்.

அத்துடன் நான் அதற்கு உடன்பட்டால் தமக்கு ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் இந்த இந்த அரசியல்வாதிகள் இந்த இந்த வீதிகளை செய்தார்கள் என சில அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டும் சொன்னார்கள்.

ஆனால் நான் அதனை அடியோடு நிராகரித்து விட்டேன். ஆனால் அந்த வீதி புனரமைப்பு பணிகள் தற்போது வேறு ஒரு ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நான் அவர்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டேன் என கூறினார்.

இதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி ஒருவர், 100 மில்லியன் ரூபாய்க்கு குறைவான நிதித் தொகை கொண்ட வேலைத் திட்டங்களை மக நெகும என்ற தேசிய நிறுவனம்

ஒன்றுக்கு வழங்குவது வழக்கம் என தெரிவித்தார்.

இதற்கு பதில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தான் கூறியது உண்மை எனவும் முறைப்பிரகாரம் கேள்விகள் கோரப்படாமல் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாகவும், பட்டப்பகலில் ஊழல் இடம்பெறுவதாகவும் குற்றம்சுமத்தினார்.

இந்நிலையில் இந்த விடயம் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts