வடக்கின் வீதி அபிவிருத்திப் பணிக்காக குளங்களிலிருந்த நீர் அளவுக்கு அதிகமாக அனுமதியின்றி எடுக்கப்பட்டதால் அக்குளங்களின் நீர் மட்டங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளன என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெறுகின்றது. சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
‘வட மாகாணத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக குளங்களில் இருந்து நீர் பெறுவதற்கு அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களில் அனுமதி பெறப்படுவதில்லை. அத்துடன், அளவுக்கதிகமாக நீரை குளங்களிலிருந்து உறிஞ்சி எடுக்கின்றனர்.
இதனால், குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து, விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் இல்லாமல் போனதுடன் கிணறுகளின் நீர் மட்டமும் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மேலும், வடக்கிலுள்ள அளவுக்கதிகமான இராணுவத்தினரும் தங்களுடைய தேவைகளுக்காக அளவுக்கதிமான நீரை குளங்கள் மற்றும் கிணறுகளில் இருந்து எடுப்பதால் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது, நிலவும் வரட்சியான காலப்பகுதியில், குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், அவர்கள் ஒழுங்கு முறையில்லாத வகையில் நீரைப் பெற்று வழங்கினால், நீர் கிடைக்கும் கிணறுகள் உவர் நீராக மாறும் வாய்ப்புக்கள் உண்டு. தொடர்ந்து ஒரே கிணற்றில் நீரைப் பெற்றால் அக்கிணறு உவர் நீராக மாற்றமடையும்.
இதனைத் தடுப்பதற்காக எனது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளை கண்காணித்து, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.