வீதி அகலிப்பின்போது சுகாதாரச் சீர்கேடுகள்; கவனிப்பார் இல்லையா என்று மக்கள் விசனம்

பிரதான வீதிகளின் அகலிப்பு நடவடிக்கைகளின் போது சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவற்றைத் தடுப்பதற்கு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்று பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

யாழ்.ஏ9 வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, காங்கேசன்துறை வீதி ஆகிய 4 வீதிகளும் அகலிக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றன. வீதி அகலிப்புக்காக வீதிகளில் கற்கள் நிரப்பப்படுவதுடன், வீதிக் கரைகளில் மண்ணும் போடப்படுகின்றது. இதனால் வாகனங்கள் செல்லும்போது புழுதி கிளம்புகிறது.

இந்தத் தூசியால் வீதிகளின் அருகில் வியாபார நிலையங்கள் வைத்திருப்பவர்கள், வீதியால் செல்லும் பாடசாலை மாணவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெரும் எண்ணிக்கையான மக்கள் சுவாச நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

வீதி திருத்த வேலைகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்கள், வீதி திருத்தத்துக்காக போடப்படும் கல், மண்ணிலிருந்து எழும் புழுதியைக் கட்டுப்படுத்துவதற்கு தண்ணீர் தெளிப்பதில்லை. சில இடங்களில் காலை அல்லது மாலையில் மாத்திரம் தண்ணீர் தெளிக்கப்படுகின்றது.

ஆனால் புழுதி எழாதவாறு தொடர்ச்சியாக தண்ணீர் தெளிப்பதில்லை. அத்துடன் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் விடுமுறையில் சென்றாலும் தொடர்ச்சியாக தண்ணீர் தெளிக்கப்படுவதில்லை. இந்த விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் வி.சுதாகரிடம் கேட்டபோது:

எமக்கும் இந்த விடயம் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. நாம் ஒப்பந்த நிறுவனத்துக்கு இறுக்கமான அறிவித்தலை வழங்கியுள்ளோம் என்றார்.

Related Posts