யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட ஐவரை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டிச் சாரதி, வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட மூவர் வீதியின் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டனர். அதனால் மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொட்டடி – ஒஸ்மானியக் கல்லூரி வீதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்றது.
“வீதியின் ஓராமாக 4 மாணவர்கள் பாடசாலைக்குக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். வேகமாக வந்த முச்சக்கர வண்டி அவர்களில் இருவரை மோதித்தள்ளியது. அத்துடன், ஸ்கூட்டிப் பப் மோட்டார் சைக்கிளிலில் பிள்ளைகளைப் பாடசாலைக்கு ஏற்றி வந்தவரையும் முச்சக்கர வண்டி மோதியது. அதனால் அவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளுடன் வடிகானுக்குள் வீழ்ந்தனர்.
சம்பவத்தை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி, வாகனத்தை வீதியில் விட்டுவிட்டு தப்பிச் சென்றார். சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸார், சம்பவ இடத்தில் நின்றவர்களை மிரட்டிவிட்டு முச்சக்கர வண்டியை மீட்டுச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதி வீட்டிலிருந்த சிசிரிவி பதிவை ஏற்க பொலிஸார் மறுத்துடன், விபத்துத் தொடர்பில் சாட்சிகளைக் கொண்டுவருமாறு மிரட்டலாகத் தெரிவித்துச் சென்றனர்” என்று அந்தப் பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்குக் காரணமான முச்சக்கர வண்டிச் சாரதி ஓட்டுமடம் பொம்மைவெளியைச் சேர்ந்த சுரேஸ் என்று அழைக்கப்படுபவர் என்று விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன், அவர் பிரபல போதைப்பொருள் வியாபாரி என்றும் பொலிஸாருடன் நெருக்கமானவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.