யாழ்ப்பாணம், பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெரு ஜே – 87 கிராமஅலுவலர் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள், வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுத்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அன்றாட உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர்.
2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட போதும் தமக்குரிய அடிப்படை வசதிகளை எவரும் செய்து தரவில்லை என்றும் நான்கு வருடங்களாக இப்படியான நிலையிலே தாங்கள் வசிப்பதாகவும் தெரிவித்த அம்மக்கள், வீட்டுத்திட்டத்திலும் தாங்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் இவற்றையெல்லாம் கண்டித்தே வீதியில் உணவு சமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்ததாக கூறினர்.