வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை பாடசாலை அதிபர்கள் மாணவர்களுக்குத் தினமும் காலைப் பிரார்த்தனையின் போது எடுத்துக் கூற வேண்டும்: எம்.எம்.ஜெப்றி

பாடசாலை மாணவர்களுக்கு தினமும் இடம்பெறும் காலைப் பிரார்த்தனையின்போது போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பில் எடுத்துக் கூறவேண்டும். வீதி விழிப்புணர்வு பற்றிய எதிர்கால நலன்கருதி பாடசாலை அதிபர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்றி தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார் அவர்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பினருக்கும் விழிப்புணர்வு பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு விரிவுபடுத்தப்பட வேண்டும். மாணவர்கள் நடந்தும், சைக்கிள்களிலும் பெற்றோர், உறவினர்களுடன் மோட்டார் சைக்கிள்களிலும் பாடசாலை சென்று வருகின்றனர்.

குறிப்பாக நடந்து அல்லது சைக்கிள்களில் பயணம் செய்யும் மாணவர்களுக்குப் போக்குவரத்து விதிமுறைகள் அவசியமாகத் தேவைப்படுகிறது.

வாகன நெரிசல் அதிகரித்துள்ள தற்காலத்தில் போக்குவரத்து விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்பட வேண்டிய கட்டாயத் தேவைகள் அதிகரித்துள்ளன.
வீதி விபத்துகளில் இருந்து மாணவர்கள் தம்மைப் பாதுகாக்க விதிமுறைகள் பெரிதும் உதவுகிறது.

எனவே வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் தமது மாணவர்களுக்குத் தினமும் காலைப் பிரார்த்தனையின் போது எடுத்துக் கூற வேண்டும். இது சமூகப் பொறுப் புடைய செயற்பாடாகும்.

வாகனங்களைச் செலுத்துவோர் வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றிருத்தல் வேண்டும். வாகன சாரதிகளாகப் பயிற்சி பெறுபவர்களுக்கு உரிய முறையில் விதிமுறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts