வீதித் திருத்த வேலைகளில் ஈடுபடும் அரச, தனியார் திணைக்களங்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டு வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுமக்களது பாவனைக்குட்பட்ட எந்தவொரு வீதியிலும் திருத்த வேலைகளை மேற்கொள்ளும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் வீதி விபத்தினை தவிர்த்துக் கொள்ளமுடியும்.
இருப்பினும் இந்த திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் இதனை கருத்திற்கொள்வதில்லை. இவர்களது பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்கமுடியாத ஒன்றாகவுள்ளது.
மாநகரசபை,வீதி அபிவிருத்தி அதிகார சபை நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அதிகார சபை போன்றவற்றுக்கு கடிதங்கள் மூலவும் நேரடியாகவும் அறிவித்துள்ளோம்.
ஆனாலும் அவர்கள் அசமந்தப் போக்குடனேயே உள்ளனர். எதிர்வரும் காலங்களில் பொறுப்புடன் செயற்பட்டு விபத்துக்களைத் தடுக்க வேண்டும் இல்லையேல் நாம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.