வீட்டிலே ஏற்படும் விபத்துக்களால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது உலகளாவிய ரீதியில் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. அனேகமான வீட்டு விபத்துக்கள் சிறுவர்களுக்கு ஒரு வயதின் பின்பே நிகழ்கின்றது. ஏனெனில் குறுநடைபோடும் குழந்தைகள் (toddlers) அனைத்தையும் ஆராயும் தன்மையும், வாயில் எதனையும் வைத்து கடிக்கும் இயல்பும் பெரியவர்கள் செய்வதை பார்த்து தாமும் அதே போல் செய்யும் பழக்கமுள்ள குறும்புக்காரர்களாக இருப்பதே யாகும்.
எவ்வாறான வீட்டு விபத்துக்கள் சிறு பிள்ளைகளுக்கு ஏற்படுகின்றன?
சிறுபிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வீட்டு விபத்துக்களில் மிகவும் பொதுவாக காணப்படக்கூடியவை பின்வருமாறு
- தவறுதலாக மண்ணெண்னெய் போன்ற பெற்றோலிய பொருட்கள், வீட்டில் காணப்படும் மருந்துப் பொருட்கள், நச்சுப் பதார்த்தங்கள் போன்றவற்றை உட்கொள்ளல்.
- விளையாட்டுப் பொருட்களில் காணப்படும் சிறிய பகுதிகள், பேனை மூடி, நாணயக்குற்றிகள், சட்டைஊசிகள், உணவுப் பொருட்களிளுள்ள கடினமான துணிக்கைகள் போன்றவற்றை விழுங்குதல்.
- குப்பி விளக்கால் அல்லது சுடுதிரவங்கள் உடலில் பட்டால் ஏற்படும் எரிகாயங்கள்.
- உயரமான பகுதிகளில் இருந்து விழுதல்.
- பென்சில், பேனை அல்லது கத்தி போண்ற கூரிய பொருட்களுடன் விளையாடும் போது ஏற்படும் காயங்கள்.
- பாதுகாப்பற்ற கிணறுகள், நீர்த்தொட்டிகள், நீர் நிலைகளில் தவறுதலாக விழுதல்.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட வீட்டு விபத்துக்களால் பாதிப்படைந்த குழந்தைகளில் சில உதாரணங்கள் கீழே தரப்படுகின்றது.
நிகழ்வு 1
இரண்டு வயதுச் சிறுவனுடன் கிராமப்புறத் தாய் மாலை வேளையில் அயல் வீட்டுக்குச் சென்று தனது சிநேகிதியுடன் அளவளாவிக் கொண்டிருந்தார். அவளது குறும்புக்கார பிள்ளை பலதையும் ஆராய்ந்து கொண்டு குடிசை வீட்டின் குசினிப் பக்கம் சென்று அங்கே நிலத்தில் வைக்கப்பட்ட குளிர்பாகப் போத்தலை எடுத்து அதன் மூடி இறுக்கமாக மூடப்படாததால் அதில் உள்ள மண்ணெண்ணெயில் சிறிதளவை அருந்தி விடுகின்றான். அதனால் அவனுக்கு புரைக்கேறி இருமல் வந்துகொண்டிருந்தது. உடனே அயல் வீட்டு அன்ரி தேங்காய்ப்பாலை பருக்கி வாந்தி எடுக்கச் செய்தார். வாந்தி எடுத்த பின்னர் அந்தப்பிள்ளைக்கு சுவாசிப்பதில் மேலும் சிரமம் ஏற்ப்படவே உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். இங்கு தகுந்த அதிதீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் சிறுவன் வீடு சென்றான்.
மேற்கூறிய நிகழ்விலிருந்து நாம் தெரிந்திருக்க வேண்டியவை எவை?
- மண்ணெண்ணெய் போன்ற பெற்றோலியப் பொருட்களும் ஆபத்தானவை. அவற்றை பாதுகாப்பாக குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் மூடி வைக்க வேண்டும்.
- குளிர்பானப் போத்தல்களில் மண்ணெண்ணெய் போண்ற நச்சுப் பதார்த்தங்களைச் சேமித்தால், குழந்தைகள் அவற்றை குளிர்பானம் என நினைத்து தவறுதலாக அருந்தி விடலாம். எனவே இவற்றை அவற்றிற்கே உரிய பாதுகாப்பான போத்தல்களில் சேமிக்க வேண்டும்.
- பெற்றோலியப் பொருட்ளை அருந்தினால், ஒரு போதும் வாந்தியேடுக்க செய்யக்கூடாது. வாந்தி எடுக்கும் போது பெற்றோலியப் பொருட்கள் சுவாசப்பாதைக்குள் செல்ல அதிக வாய்ப்புண்டு. அதனால் நியூமோனியா ஏற்படலாம். எனவே பெற்றோர் குழந்தைக்கு வாந்தியேடுக்கச் செய்யாமல் உடனடியாக அருகிலுள்ள வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
நிகழ்வு 2
தாயோருவர் தான் கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதன் பருப்புக்களை உடைத்து தனது இரண்டு வயதுக் குழந்தைக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை திடீரேன புரைக்கேறி இருமத் தொடங்கியது. மூச்சு விடவும் சிரமப்பட்டது. தாய் அயலவர்களின் துணையுடன் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். அங்கு போதிய வசதிகள் இன்மையால் குழந்தையை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றினார்கள். அங்கு குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதுடன். காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரால் சுவாசப் பாதையை அடைத்துக் கொண்டிருந்த கச்சான் துகள்களை எடுத்த பின் குழந்தை சுகமடைந்தது.
இந்நிகழ்விலிருந்து எமக்கு தெரிய வேண்டியவை.
- ஒரு போதும் மூன்று வயதிற்குட்டபட்ட குழந்தைகளுக்கு கடினமான சிறு துணிக்கைகளான உணவுப் பொருட்களை வழங்கக் கூடாது. அதே போல் குழந்தைகளுடைய விளையாட்டுப் பொருட்களினது விழுங்கக்கூடிய இலகுவில் கழரும் சிறு பொருட்கள் இருக்கக்கூடாது. மேலும் நாணயக்குற்றிகள் சிறிய ஊசிகள், பேனை மூடிகள் என்பவற்றையும் குழந்தைகள் விழுங்க அதிகம் வாய்ப்புண்டு. வீட்டிலுள்ள பெரியவர்கள் அவதானமாக இருப்பதன் மூலம் இது போண்ற அநாவசிய ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.
- சிறு துணிக்கைகளான பிறபொருட்களை குழந்தைகள் விழுங்கினால் உடனடியாக அதற்கான முதலுதவியை செய்து பிறபொருளை வெளியேற்றலாம். எனவே அது பற்றியும் பெரியவர்களுக்கு தெரிந்திருத்தல் நல்லது.
நிகழ்வு 3
முதல்நாள் தான் தனது ஒரு வயது பிறந்த நாளைக் கொண்டாடிய வன்னிப் பகுதி குழந்தை ஒன்று பிற்பகல் வேளையில் வீட்டினுள்ளே தாய் தந்தையருடன் விளையாடிக்கொண்டிருந்தது. தந்தை சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டார். அம்மா தகப்பன் பிள்ளையை கவனிப்பார் என நினைத்து ஏதோ வேலையாக வீட்டின் பின்புறம் சென்று விட்டார். குழந்தை தாய் வெளியே சென்றதைக் காணாது அவரைத் தேடி வீட்டின் முற்றத்திற்கு தத்தித் தத்தி சென்று வீட்டின் முன்னேயுள்ள பாதுகாப்பு கட்டில்லாத மண்கிணற்றில் (துரவு) விழுந்து விட்டது. சிலநிமிடங்களில் வந்த தாய் குழந்தையை காணாது தேடிப்பார்க்கையில் மண்கிணற்றினுள்ளே மிதந்து கொண்டிருந்தது. உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்நிகழ்வு எமக்கு தெரிவிப்பது எவை?
- குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக கண்ணை இமைகாப்பது போல் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
- பாதுகாப்பற்ற, கட்டில்லாத கிணறுகளுக்கு பாதுகாப்பு கட்டு அல்லது வேலி அமைக்க வேண்டும். அதே போல் வீட்டு வளவினுள்ளே நீர் நிலைகள் இருப்பின் அதற்கும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
- தகுந்த முதலுதவி முறைகளை பெரியவர்கள் தெரிந்திருப்பது நன்மை தரும்.
மேற்கூறியவை போண்ற முற்றிலுமு் தவிர்க்ககூடிய ஆபத்துக்களை (வீட்டு விபத்துக்களை) தகுந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்றின் முற்றிலும் தடுக்க முடியும். எனவே அனைவரும் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய வீட்டுவிபத்துக்களைத் தடுக்க வழிமுறைகளை நடைமுறப்படுத்த வேண்டும்.
Dr.ந.ஸ்ரீசரபவணபவானந்தன்
குழந்தை வைத்தி நிபுணர்
யாழ் போதனாவைத்திய சாலை