இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தில் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான இறுதி “கட்டவுட்’ புள்ளி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இதனால் பிரதேச செயலகங்களில் வீட்டுத் திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை காட்சிப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்திய வீட்டுத் திட்டத்துக்குரிய இரண்டாம் கட்டப் பயனாளிகளைத் தெரிவு செய்யும் பணிகள் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் இடம்பெற்றன. இதனடிப்படையில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்திய வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்கள் புள்ளியிடலில் தெரிவு செய்யப்பட்டனர். 10 புள்ளி அல்லது அதற்கு மேல் புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு இந்திய வீட்டுத் திட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தற்போது 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 10 புள்ளிகளுக்கும் மேல் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பெற்றுள்ளனர். இருப்பினும் இரண்டாம் கட்டத்துக்கு 2 ஆயிரத்து 600 வீடுகளே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
10 புள்ளிகளுக்கு மேல் பெற்ற சகலருக்கும் இந்திய வீட்டுத் திட்டம் இரண்டாம் கட்டத்தில் வழங்கப்படமுடியாத நிலை தோன்றியுள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் எத்தனை புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
இதேவேளை இந்திய வீட்டுத் திட்டத்துக்குரிய இரண்டாம் கட்டப் பயனாளிகளைத் தெரிவு செய்து பெயர்ப்பட்டியல் அனுப்பும் இறுதிநாள் இன்று வெள்ளிக்கிழமையாகும்.