ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் வீட்டிற்கு தீ வைத்த பெண் காவலரும், ஆட்டோவுக்கு தீ வைத்த ஆண் காவலரும் யார் என்பதை காவல்துறை உயரதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடையைப் போக்க நிரந்தரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.17) முதல் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை (ஜன.21) பிறப்பித்தார். தமிழக சட்டப்பேரவையிலும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார். அதன்படி தமிழக சட்டப்பேரவையிலும் திங்கள்கிழமை (ஜன.23) மாலை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதால்,போலீஸார் மெரீனா கடற்கரைக்கு திங்கள்கிழமை காலை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால், போலீஸாரின் அறிவுறுத்தலை ஏற்காமல், போராட்டத்தைத் தொடர்ந்தனர். மெரீனாவில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இவர்களை அப்புறப்படுத்தும் அதே நேரத்தில், சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரீனாவுக்கு வரக் கூடிய அனைத்துச் சாலைகளுக்கும் போலீஸார் “சீல்’ வைத்தனர்.
மெரீனாவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள், சென்னை முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
மேலும், மெரீனா கடற்கரையை நோக்கி பல இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும் வாகனங்களில் வரத் தொடங்கினர். ஆனால், மெரீனாவுக்கு வரும் அனைத்துச் சாலைகளையும் போலீஸார் “சீல்’ வைத்ததால், அவர்களால் முன்னேற முடியவில்லை. தங்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். கற்கள், பாட்டில்களை போலீஸார் மீது வீசி தாக்கினர். அதனைத் தொடர்ந்து, போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.
ஆனால், அவர்கள் தொடர்ந்து போலீஸார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசிக் கொண்டே இருந்தனர். இதனால் மெரீனா கடற்கரையைச் சுற்றியுள்ள இடங்கள் நாள் முழுவதும் போராட்டக் களமாக மாறியது.
திருவல்லிக்கேணி அருகே ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலை வழியாக மெரீனாவுக்கு முன்னேற முயன்ற 500-க்கும் மேற்பட்டோரை திங்கள்கிழமை (ஜன.23) காலை 10 மணியளவில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸார் மீது கற்கள், பாட்டில்களை வீசியதோடு, ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தை வெளிப் பக்கமாக பூட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்தனர். வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
இதற்கிடையே கலவரத்தை பயன்படுத்தி காவல்துறையினரே சென்னை நடுக்குப்பம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் காவலர் ஒருவர், அருகில் இருந்த குடிசை வீட்டிற்கும் தீ வைக்கும் காட்சிகளும், வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வீடியோ ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து காவலர்களே பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறுகையில், வீடியோ காட்சி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். காவலர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீடியோவில் இடம்பெற்றுள்ள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வீட்டிற்கு தீ வைத்த பெண் காவலரும், ஆட்டோவுக்கு தீ வைத்த ஆண் காவலரும் யார் என்பதை காவல்துறை உயரதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் செய்த குற்றத்திற்கு வலுவான வீடியோ ஆதாரங்கள் உள்ளதால், அவர்கள் இடைநீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.