வீடு புகுந்து தாக்கப்பட்டாரா நயன்தாரா?

சில தினங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா வீட்டில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து, அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதில் அவரது கண், கை மற்றும் காலில் அடிப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கிய ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நயன்தாரா. அதனையடுத்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர்-1 நடிகையாக உயர்ந்தார். இடையில் சிம்புவுடன் காதல் வலையில் சிக்கினார். அதன்பின்னர் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்து, அவருக்காக மதம் எல்லாம் மாறினார். பிரபுதேவாவும் தான் காதலித்து மணந்த முதல் மனைவியை விவாகரத்து எல்லாம் செய்தார். இருவரும் திருமணம் செய்ய இருந்த வேளையில் திடீரென அந்தக்காதல் முறி்ந்து போனது.

பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்கிஸை ஆரம்பித்த நயன்தாரா, ராஜா ராணி படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார், கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான படங்களில் மூன்று படங்கள் தொடர் ஹிட்டாக, மீண்டும் இழந்த சினிமார்க்கெட்டை பிடித்து இப்போது நம்பர்-1 அரியணையில் ஏறியிருக்கிறார். கூடவே இன்னொரு காதல் கிசுகிசுவிலும் சிக்கியிருக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை தற்போது நயன்தாரா காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிறைய செய்திகள் வந்துள்ளது, வந்து கொண்டும் இருக்கிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.

தற்போது நயன்தாரா கோயம்பேடு அருகே பிளாட் ஒன்றை வாங்கி அங்கு குடியேறி உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நயன்தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என்று கூறி மர்ம நபர்கள் சிலர் நயன்தாராவின் வீட்டிற்குள் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் அவரது கண், கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும், தனியாக நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாராவை தாக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை. பழைய பகை அல்லது பழைய காதல் பகை காரணமாக யாரேனும் தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக நயன்தாரா, போலீசிலும் புகார் அளிக்கவில்லையாம்.

நயன்தாரா தாக்கப்பட்டார் என்ற இந்த செய்தி இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து நயன்தாரா தங்கியுள்ள அபார்ட்மெண்டில் விசாரித்தபோது, இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறினர். நயன்தாராவின் வீட்டு காவலர்களிடம் விசாரித்தபோது, ‘இதெல்லாம் பொய்யான செய்திகள். காரணம் மேடம் கடந்த மூன்று தினங்களாக ஹைதராபாதில் ஷூட்டிங்கில் இருக்கிறார். யாரோ தேவையில்லாமல் கிளப்பிய வதந்திகள் இவை,” என்றார்.

Related Posts