இராணுவத்தினரிடமிருந்து காணிகளை மீளப்பெறும் மக்களுக்காக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு வேலைத்திட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் இணைந்து செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 2,221 ஏக்கர் காணி வடக்கு மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவத்தினர் காணிகளை வைத்திருந்தாலும், பொதுமக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து உதவிகளையும் படையினர் வழங்கி வருகின்றனர்.
அத்துடன், காணிகளை மீளப்பெறும் மக்களுக்காக இராணுவத்தினரால் விசேட வீடமைப்பு வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் 47 ஏக்கர் காணியில் 100 வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
குறித்த வீடுகள் கட்டும் பணியில் இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளும் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.