வீடுகள் கிடைக்காத குடும்பங்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள தகுதியிருந்தும் வீடுகள் கிடைக்காத தனி நபர் மற்றும் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்டோரின் விவரங்களை பிரதேச செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் மிகவும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடும் பாதிப்புக்களையும் உயிரிழப்புக்களையும் எதிர்கொண்டு தனிநபராகவும் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்டு வீட்டுத்திட்டங்கள் கிடைக்க வேண்டிய நிலையில் காணப்படும் ஏராளமான குடும்பங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வீட்டுத்திட்டங்கள் எவையும் கிடைக்காத நிலையில் தற்காலிக வீடுகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கடந்த மாத இறுதியில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது தனிநபர் வீட்டுத்திட்டங்கள் கிடைக்கப்பெறாமை தொடர்பாக பொது அமைப்புக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மாவட்டச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

மிக விரைவாக வீட்டுத்திட்டத்திற்கான வேலைகள் நடைபெறுகின்றன. வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய தகுதிகள் உள்ள ஒரு அங்கத்தவர்கள் இரு அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களின் விவரங்களை பிரதேச செயலாளர்கள் அனுப்பி வைக்கவேண்டும். அவர்களுக்கு வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts