வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது: நடிகர்-நடிகைகள் மாடிகளில் தஞ்சம்

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இந்த வெள்ள பாதிப்புக்கு நடிகர்-நடிகைகளும் தப்பவில்லை. கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில்தான் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

இந்த பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. அடையாறில் சீறிக்கொண்டு செல்லும் வெள்ளம் சைதாப்பேட்டையை மூழ்கடித்து தியாகராயநகர், கோடம்பாக்கம் பகுதிகளையும் புரட்டிப்போட்டது.

நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அவர்கள் தவித்தனர். வீட்டின் முதல் தளத்தை காலிசெய்து விட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். தேனாம்பேட்டை செனட்டாப் ரோடு பகுதியில் உள்ள நடிகை திரிஷா வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. அண்ணாநகரில் உள்ள விஷால் மற்றும் ஆர்யா வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது.

நடிகர் சித்தார்த் தனது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பெட்டி, படுக்கையுடன் மாடிக்கு சென்றார். வீட்டில் நுழைந்த மழை வெள்ளத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அத்துடன் வாகனங்கள் ஏற்பாடு செய்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொட்டலங்களும் வழங்கி வருகிறார்.

‘என் வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளது. மாடிக்கு செல்கிறோம். தமிழ் நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று டுவிட்டரில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை குஷ்பு வீடு பட்டினப்பாக்கத்தில் உள்ளது. அவர் வீட்டின் முன்னால் ஆறுபோல் வெள்ளம் ஓடியது. அதனை பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் நடந்து சென்று பட்டினப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கினார். அவர் கூறும்போது ‘தொடர்ந்து மழைபெய்ததால் மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. இதனால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எப்படித்தான் வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

தியாகராயநகரில் உள்ள சூர்யா, கார்த்தி, பிரபு வீடுகள் முன்பும் வெள்ளம் சூழ்ந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சத்யராஜ், நமீதா வீடுகள் முன்பும் வெள்ளம் ஆறாக ஓடியது. போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன்பும் வெள்ளம் முழங்கால் அளவுக்கு மேல் ஓடியது. கோட்டூர்புரத்தில் உள்ள நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா வீட்டுக்குள் அடையாறு வெள்ளம் புகுந்தது.

விருகம்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் விவேக் வீட்டையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. அவர் கூறும்போது ‘நான் ஐதராபாத்தில் சிக்கிக்கொண்டேன். சென்னை மக்களின் நிலை கண்டு எனது இதயத்தில் ரத்தம் வழிகிறது’ என்றார். தியேட்டர்களில் வெள்ளம் புகுந்ததால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

வடபழனியில் உள்ள சினிமா ஸ்டுடியோக்களில் வெள்ளம் இடுப்பளவுக்கு உள்ளது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. திரைப்படத்தொழில் அடியோடு முடங்கி உள்ளது.

raj-balaji-siththarth-1

kushboo-3

kushboo-2

kushboo-1

Related Posts