தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த 2014ஆம் ஆண்டு 303 வீடுகள் யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் பரந்த அடிப்படையிலான கடன்திட்டம், வருமானம் குறைந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டம், நிரந்தர வருமானம் உடையவர்களுக்கான கடன் திட்டம், மானிய அடிப்படையிலான வீடமைப்புத்திட்டம் என நான்கு விதமான வீடமைப்பு திட்டங்களின் கீழ் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்துக்கு 65.9 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. பரந்த கடன் திட்டத்தின் கீழ் 8 மில்லியன் ரூபாய் செலவில் 67 வீடுகளும், வருமானம் குறைந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டத்தின் கீழ் 9.7 மில்லியன் ரூபாய் செலவில் 100 வீடுகளும், நிரந்தர வருமானம் உடையவர்களுக்கான கடன் திட்டத்தின் கீழ் 47.7 மில்லியன் ரூபாய் செலவில் 131 வீடுகளும், மானிய அடிப்படையிலான வீடமைப்பு திட்டத்தின் கீழ் 0.5 மில்லியன் ரூபாய் செலவில் 5 வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி 67, கரவெட்டி 45, கோப்பாய் 31, தெல்லிப்பழை 26, சண்டிலிப்பாய் 23, உடுவில் 23, பருத்தித்துறை 18, காரைநகர் 13, யாழ்ப்பாணம் 13, சங்கானை 12, நெடுந்தீவு 10, நல்லூர் 10, மருதங்கேணி 8, ஊர்காவற்துறை 3, வேலணை 1 என்றவாறு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.