வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியில் கல்வியை தொடரும் சிறார்கள்

வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகததுக்கு அருகில் உள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியிலும் தொற்று நோய் அபாயத்திற்கு மத்தியிலும் கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.

kuppai-school-1

யாழ். ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள நல்லூர் முத்தமிழ் முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதிகளில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதனால் சிறார்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் தமது கல்வி நடவடிக்கையை தொடர்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலை மதில் ஓரமாக வீட்டுக் குப்பைகள் , விலங்குகளின் கழிவுகள் மற்றும் பழுதடைந்த உணவு வகை பைகளில் கட்டி வந்து சிலர் வீசி செல்கின்றனர். அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன.

முன்பள்ளியில் கற்கும் சிறார்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. குப்பைகளில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் மிருக கழிவுகள் என்பவற்றை நாய்கள், காகங்கள் இழுத்து வீதிகளில் வைத்து உண்பதாலர் அந்த வீதியால் பயணம் செய்வோரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

குப்பைகளால் பெருகும் இலையான்களினால் பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் அயலில் உள்ளவர்களும் தொற்று நோய்கள் ஏற்பட கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் யாழ்.மாநகர சபையினருக்கு அறிவித்த போது அவர்களால் “இவ்விடத்தில் குப்பைகளை கொட்டாதீர்கள்” எனும் அறிவித்தல் பலகை நடப்பட்டது. அதனை இரவோடு இரவாக இனந்தெரியாதவர்கள் கழற்றிச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் குப்பைகளை கொட்டுவதற்கு என யாழ்.மாநகர சபையினால் வாளிகள் வைக்கப்பட்டன அவையும் களவாடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் மாநகரசபையினர் உரிய முறையில் கழிவகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பாடசாலை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவின் அலுவலகத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts