தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர்களான ஏக்கநாயக்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் ஜமாஅத் நிர்வாகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளனர்.
நேற்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க மற்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின்போது விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதை தெளிவுபடுத்தும் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
இதேவேளை, விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக இடம் பெற்றிருக்கும் காட்சிகளை தெளிவுபடுத்தும் கடிதத்தை திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவர் காமினி குமார சேகரவுக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் வழங்கியதுடன், திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.
இதையடுத்து,இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க தான் ஆவன செய்வேன் என்றும் அவர் ஜமாஅத் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 25ம் திகதி வெளிவரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றன.