பொதுபலசேனாவின் பௌத்த குருமார் தீபாவளித்தினமான நேற்று புதன்கிழமை காலை தெஹிவளை விஷ்ணு கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்து – பௌத்தர்களிடையே ஒற்றுமை மாதத்தை பொதுபலசேனாவும் இந்து சம்மேளனமும் தீபாவளித் தினத்திலிருந்து ஒரு மாதத்திற்கு பிரகடனப்படுத்திய நிலையிலேயே இந்துக் கோவிலில் பௌத்த குருமார் கலந்துகொண்ட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
தீபாவளித்தினமான நேற்று காலை 9 மணிக்கு பொதுபலசேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரரின் பௌத்த மத்திய நிலையம் அமைந்துள்ள தெஹிவளையில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
விஹாரையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் உட்பட மேலும் பல தேரர்களும் இந்து சம்மேளனத்தின் பிரமுகர்களும் பௌத்த மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.
பின்னர் கலந்து கொண்டவர்களுக்கு பாற்சோறு, சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டு கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதன்போது, இந்துக்கள் – பௌத்தர்கள் பணம், சலுகைகள் வழங்கி மூளை சலவை செய்யப்பட்டு கிறிஸ்தவ முஸ்லிம் அடிப்படைவாதிகள் மதமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, இந்து சம்மேளனத்தின் ஊடகச் செயலாளர் ராஜூ பாஸ்கரன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்துக்களும் பௌத்தர்களுக்குமென 10 ஏக்கர் நிலப்பரப்பில் மயானங்கள் நிறுவப்பட வேண்டுமென்ற யோசனையை முன்வைத்தார். இதன் பின்னர் கிரம விமல ஜோதி தேரர், விதாரன்தெனியே தத்த தேரர் உட்பட பௌத்த குருமாரும் டிலந்த விதானகே மற்றும் முக்கியஸ்தர்களும்
பூஜை தட்டுகளை சுமந்த வண்ணம் தெஹிவளை விஷ்ணு கோவிலுக்கு இந்து சம்மேளனத்தினருடன் வருகை தந்தனர்.
பௌத்த குருமாரை வரவேற்ற கோவில் பிரதம பூசகர் கருவறைக்குள் அழைத்து சென்று விசேட பூஜை வழிபாடுகளை நடத்தினார்.
பின்னர் வெளியே வந்ததும் பௌத்த குருமாருக்கு காலாஞ்சி வழங்கப்பட்டது. அங்கு கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்ட சிறுமியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நேற்று தீபாவளி தினமென்பதால் விஷ்ணு கோவிலில் பெருமளவான இந்துக்கள் கூடியிருந்ததோடு பௌத்த குருமாரை கோவிலில் கண்டு ஆச்சரியமடைந்தவர்களாக காணப்பட்டனர்.