விஷமத்தனமான பிரச்சாரங்களால் நாம் தளர்ந்துவிடப் போவதில்லை! வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை

north-provincial-vadakku-npcவடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதில் தமக்குள்ள இடர்பாடுகளை மேலோட்டமாகக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சரின் சார்பில் அவரது பிரத்தியேகச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

அதன் முழு விவரம் வருமாறு:

அண்மைக்காலத்தில் வடமாகாண சபையை விமர்ச்சிக்கும் வகையில் தேசிய வானொலியில் விளம்பர வடிவில் சில செய்திகள் ஒலிபரப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. அதனைச் செய்பவர் யாரென்று வெளிப்படுத்த திராணியில்லாது – உரிமை கோராமல் – வெளியிடப்படும் இத்தகைய விஷமத்தனமான பிரச்சாரங்களால் நாம் தளர்ந்துவிடப் போவதில்லை என்ற போதிலும் எமது மக்களுக்கு யதார்த்தத்தை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எம்மைச் சார்ந்ததாகும் என்பதால் இவ்விளக்கத்தை வெளியிடுகின்றோம்.

அடிப்படையில் மேற்படி விஷமப் பிரசாரத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையாகும்.

வடமாகாண சபைக்கு 2014 ஆம் ஆண்டுக்குப் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி விவரம் பின்வருமாறு:-

* அலுவலர்களின் சம்பளம் போன்ற மீண்டெழும் செலவீனம் தவிர்ந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை – 280 மில்லியன் ரூபா.

* மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்த நன்கொடை – 1035 மில்லியன் ரூபா.

* ஆக மொத்தம் – 1315 மில்லியன் ரூபா. இவ்விரு நிதி மூலங்களே மாகாண சபையினால் அபிவிருத்தி தொடர்பாக தீர்மானிக்கப்பட்டு நிர்வகிக்கப்படக்கூடியனவாகும்.

அதாவது முன்னர் ஒரு கூட்டத்தில் முதலமைச்சரால் குறிப்பிடப்பட்ட 1872 மில்லியன் ரூபா என்பதிலும் குறைந்த தொகையாகிய 1315 மில்லியன் ரூபாவே அபிவிருத்தி சம்பந்தமாக மாகாண சபையால் நிர்வகிக்கப்படக்கூடிய தொகையாகும்.

இவற்றை விட சில விசேட திட்டங்கள் மத்திய அரசினால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றை நிறைவேற்றும் முகவர்களாக வடமாகாண சபையின் கீழ்வருகின்ற திணைக்களங்கள் செயற்படுகின்றன.

திட்ட முன்மொழிவுகள் எம்மால் வழங்கப்படுகின்ற போதிலும் அமுலாக்கல், மீளாய்வு செய்தல், கொடுப்பனவுகள் மேற்கொள்ளல் மற்றும் நிறைவேற்றப்பட்ட பின் திறந்து வைத்தல் போன்றன மத்திய அரசினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தகைய விசேட திட்டங்களுக்கே அதிக பட்சத் தொகையாக 4516 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை வடமாகாண சபைக்கு வழங்கப்படவில்லை.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையிலும் கூட, ஒவ்வொரு வேலைத் திட்டமும் விரிவான முறையில் நிதி ஆணைக்குழுவிற்கு அனுப்பி அனுமதி பெறப்பட்ட பின்னரே ஆரம்பிக்கப்படலாம். இந்நிதியில் கூட முழுமையான தொகை விடுவிக்கப்படுவதில்லை.

நிதி ஆணைக்குழுவினால் அனுமதியளிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை உரிய முறையில் சிறப்பாக நிறைவேற்றப்படும். எனினும் எமது மாகாணத்துக்கே உரித்தான தடங்கல்களாக உள்ள சில பிரச்சினைகளும் இவ்விடயத்தில் தாக்கத்தை செலுத்துகின்றன.

உதாரணமாக –

* பிரதம செயலாளர் முதலமைச்சருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்காது தன்னிச்சையாகச் செயற்படல்.

* பிரதம செயலாளர் மற்றும் திட்டமிடல், நிதி போன்ற விடயங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைக்குப் பெறுப்புக் கூறுபவர்களாக இல்லாதிருத்தல்.

* சட்டத்திற்குப் புறம்பாக உயர் அதிகாரிகளுக்கு ஆளுநரால் வழங்கப்படும் நிர்வாகம் சம்பந்தமான நேரடியான அறிவுறுத்தல்கள்.

* அபிவிருத்தித் திட்டங்களை முன்னின்று செயற்படுத்த வேண்டிய இலங்கை நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை, பொறியியலாளர் சேவை போன்ற நாடாளவிய சேவை வெற்றிடங்களும் தொழில்நுட்ப சேவை போன்ற மாகாண பொதுச் சேவை வெற்றிடங்களும் நிரப்பப்படாதிருத்தல். – இவை போன்ற பிரச்சினைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைக்கு ஒத்துழைப்பு வழங்காது அரசாங்கம் முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றது.

ஆயினும் எத்தகைய இடர்பாடுகளின் மத்தியிலும் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் என்றும் எமது மாகாண சபை அக்கறையுடன் செயற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts