விவசாய நிலங்களில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் – பொ.ஐங்கரநேசன்

பொது மக்களின் வளமான விவசாய நிலங்கள் மாத்திரம் அல்லாமல், வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சுக்கு உரித்தான பண்ணைகள் கூட இராணுவத்தினர் வசம் உள்ளன. வடக்கு மாகாணப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு இனிமேலும் தடையாக நிற்காமல் இந் நிலங்களில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Ainkaeanesa-ejaffna2

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடலும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தூவல் நீர்ப்பாசன உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் திங்கட் கிழமை (04.11.2013) ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாய் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு பொ.ஐங்கரநேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது விமது விவசாயிகள் பாரம்பரிய வேளாண் விவசாய முறைகளில் கைதேர்ந்தவர்கள். எமது மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய விதைகள் எவை என்பது பற்றியும், அவற்றின் விதைப்புக்காலம் பற்றியும், அவற்றுக்கு இடவேண்டிய இயற்கைப் பசளைகள் பற்றியெல்லாம் போதிய பட்டறிவு கொண்டிருக்கிறார்கள். அதே சமயம், எமது இயற்கைச் சூழலுக்கும் காலத்துக்கும் ஒவ்வொத நடைமுறைகளையும் பின்பற்றிவருகிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.

உதாணரத்துக்குக் குறிப்பிடுவதானால், பயிர்களுக்குத் தேவையான அளவு நீரிலும் பார்க்க மிகப் பன்மடங்கு நீரையே இறைத்துக்கொண்டிருக்கிறோம். நிலத்தடி நீர் ஒரு வற்றாத வளம் என்ற எமது தவறான கணிப்பினால் நேர்ந்த அவலம் இது. ஆனால்,விவசாயத்துக்கு மாத்திரம் அல்லாமல் எந்தத் தேவைகளுக்கேனும் ஒரு சொட்டு நீரையேனும் மேலதிகமாக வீணாகப் பயன்படுத்த முடியாத நீர் நெருக்கடிகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

இதனால் தான் உலகின் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நாடுகள் தூவல் நீர்ப்பாசனம், சொட்டு நீர்ப்பாசனம் என்று மாற்று நவீன நீர்ப்பாசன உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளன. அது மாத்திரம் அல்லாமல் நீர் அதிகம் தேவைப்பட்டாத பயிர்களை அடையாளம் கண்டு பயிரிடவும் ஆரம்பித்துள்ளன. ஒரு கிலோ அரிசியை அறுவடை செய்வதற்கு ஏறத்தாள 3400 இலீற்றர் தண்ணீரும்,ஒரு கிலோ சோளத்தை அறுவடை செய்வதற்கு 900 இலீற்றர் தண்ணீரும் செலவாகிறது. இது போன்று நாமும் நமது பாரம்பரிய விவசாய அறிவோடு நவீன விவசாயத் தொழில் நுட்பங்களையும் அறிவையும் உள்வாங்கினாலே எமது விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

விவசாயிகளை அறிவூட்டுவதற்கு விவசாயப் போதனாசிரியர்கள் உள்ளார்கள். இவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கென சேவைக்காலப் பயிற்சி நிலையங்கள் நாட்டில் உள்ளன. ஆனால், இரணைமடுவில் உள்ள எமது மாகாண அமைச்சுக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட சேவைக்கால பயிற்சி நிலையத்தில் இராணுவமே நிலைகொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல,வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்குச் சொந்தமான விதை உற்பத்திப் பண்ணை, தாய்த் தாவரப்பண்ணை, அலுவலகங்கள் என்று 400 ஏக்கர்களுக்கும் அதிகமான பரப்பளவை இராணுவம் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது. இந் நிலையில் நாம் எமது விவசாயத் துறையை எவ்வாறு மேம்படுத்த முடியும்?

விடுதலைப்புலிகள் ஒரு போராளி அமைப்பு. அந்த அமைப்பு தமது வசதி வாய்ப்புக்கள் கருதிப் பயன்படுத்திய இடங்கள் எல்லாவற்றிலும், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்பும் இராணுவம் நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஓர் அரசாங்கம் நினைப்பது வீம்பான செயலே அன்றி வேறல்ல.

எனவே, இனிமேலாவது இராணுவத்தை எமது வேளாண் நிலங்களில் இருந்து வெளியேற்றி, வடக்கின் விவசாயப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Posts