வடமாகாணத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருட்களில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்கள் கழிவாகப் பெற்றுவரும் நடைமுறை எதிர்வரும் 2014, தை முதலாம் திகதியில் இருந்து நீக்கப்படுகின்றது என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் விடுத்திருக்கும் அறிக்கையில்,
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் நாம் சென்று விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்ததில் அவர்கள் தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இவற்றில் தங்கள் விளைபொருட்களில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்கள் கழிவாகப் பெற்று வருவதைப் பிரதான முறைப்பாடாக வெளிப்படுத்தியிருந்தனர். உதாரணத்துக்கு, 100 கிலோ விளைபொருளில் விற்பனையாளர்கள் 10 கிலோவைக் கழிவாக எடுத்துக்கொண்டு 90 கிலோவுக்கே பணம் வழங்கி வருகின்றனர். அதேசமயம் சந்தையைக் குத்தகைக்கு எடுத்து நடாத்துபவர்கள் 100 கிலோவுக்குமான வரியை விவசாயிகளிடம் அறவிட்டு வருகின்றனர். இந்த வரியின் விழுக்காடும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகிறது.
விளைபொருட்களுக்குத் தரத்தின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்கும்போது இக்கழிவு நடைமுறையால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக முறையிட்ட விவசாயிகள், போராட்டகாலத்தில் அறிமுகமான இக்கழிவுமுறைமை இனிமேலும் தொடர்வது நியாயமாகாது என்பதால் இதனை நீக்கித் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இவற்றின் அடிப்படையில் வடமாகாணத்தின் உள்ளூராட்சிச் சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் பல்வேறு திணைக்கள அதிகாரிகளையும் அழைத்துக் கலந்துரையாடியதில், எதிர்வரும் 2014, தை முதலாம் திகதியில் இருந்து இக்கழிவு நடைமுறை நீக்கப்படுகின்றது என்றும், குத்தகைக்காரர்கள் அறவிடும் வரி 4 விழுக்காடுக்கு மேற்படலாகாது என்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இம்முடிவுகள் வடமாகாண அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களது அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தகாலப் போரும் இடப்பெயர்வுகளும், காலநிலை மாற்றங்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும், விவசாயப் பொருளாதாரத்திலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், விவசாயிகளுக்கு விவசாயத் தொழில் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி, சரிவுற்றிருக்கம் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண விவசாய அமைச்சாலும், உள்ளூராட்சிச் சபைகளாலும், திணைக்களங்களாலும் எடுக்கப்பட்டிருக்கும் இம் முடிவுகளைத் தீர்க்கமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.