விளம்பர நடவடிக்கையால் நல்லூரானுக்கு பாதிப்பு – ஆலயநிர்வாகத்தினர்

Nallur_Kandasamy_front_entranceநல்லூர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் ஆலயச் சூழலில் அரசியல் , வியாபார விளம்பர நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஆலயத்தினர் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஆலயத்தரப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் கந்தனின் மகோற்சவம் இடம்பெற்று வரும் வேளையில் ஆலயச்சூழலிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விளம்பரங்கள் மற்றும் அரசியல் பதாகைகள் போன்றனவற்றை அமைப்பதனை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைப்பதனால் கந்தனை தரிசிக்க வரும் மெய் அடியார்களின் கவனயீர்ப்பு கந்தன் மீது இல்லாது குறித்த விளம்பரங்கள் மீதே செல்லும் இதனால் ஆலயத்தினராகிய நாங்கள் இவ்வாறான விளம்பரங்களை விரும்பவில்லை.

மெய் அடியார்களது நலன் கருதியே அனைவரும் கந்தனைத் தரிசிக்கும் முகமான வெளிவீதி சுற்றப்படுகின்றது. எனினும் அதற்கு ஏதாவது மேற்கூறப்பட்ட காரணங்களினால் தடை ஏற்படுமாயின் கந்தப்பெருமான் உள்வீதியே வலம் வருவார்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் எம்மிடம் உண்டு. எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் விளம்பரதாரர்கள் என அனைவரும் இந்தக் கோரிக்கையினை கவனத்தில் எடுத்து தூய்மையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை நல்லூர் கந்தனுக்கு இம்முறை ஹெலியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்யும் முறை நிறுத்தப்பட்டுள்ளது என ஆலயத்தினர் அறிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா அன்று யாழ். மாவட்ட கட்டளைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஹெலியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

எனினும் இவ்வாறான செயற்பாட்டினால் பக்தர்களின் மனங்களில் கவனக்குறைவு ஏற்படும் எனவே அதனை விரும்பாத ஆலயத்தினர் இம்முறையும், எதிர்வரும் காலங்களிலும் ஹெலியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்வதனை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

அதன்படி யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுடன் ஆலயத்தினர் பேச்சுக்களை நடாத்தி குறித்த முடிவினை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts