வில்லன் வேடங்களை விரும்பும் கதாநாயகர்கள்

திரைப்படங்களில் கதாநாயகனை விட வில்லன் கதாபாத்திரங்கள் வலிமையாக சித்தரிக்கப்படுகின்றன. நடிப்பு திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் இதில் அதிகம். காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதற்கும் இந்த கதாபாத்திரங்கள் உதவுகின்றன. கடைசி வரை வில்லன் கை ஓங்கி இருப்பதுபோல் திரைக்கதையை நகர்த்தி கிளைமாக்சில் கதாநாயகன் ஜெயிப்பதுபோல் முடிக்கும் படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்கின்றன.

rajini-vijay-vikram

எனவே வில்லன், கதாநாயகன் இரண்டு வேடங்களிலும் நடிப்பதற்கு கதாநாயகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் இருந்தே இரண்டு வேடங்களிலும் அவர்கள் நடிப்பது நடந்து கொண்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர் ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திலும், சிவாஜி ‘உத்தம புத்திரன்’ படத்திலும் இரண்டு கதாபாத்திரங்களையும் சேர்த்து செய்தார்கள். இதில் அவர்களின் வில்லன் வேடங்கள் பேசப்பட்டன. அந்த வில்லன் ஆசைகள் இன்றைய நடிகர்களிடமும் தொடர்கிறது.

ரஜினிகாந்த் எந்திரன் படத்தில் கதாநாயகன்-வில்லன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்தார். அவரது வில்லன் வேடம் அதிரடியாக சித்தரிக்கப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் ஆளவந்தான், தசாவதாரம் படங்களில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் வந்தார். ஆளவந்தானில் சைக்கோ வில்லனாக அவர் நடித்த சண்டை காட்சிகள் ஹாலிவுட் மிரட்டலாக இருந்தது. அதுபோலவே தசாவதாரம் படத்திலும் வில்லன் ‘பிளட்சர்’ வேடத்தில் கலக்கினார். சண்டமாருதம் படத்தில் சரத்குமார் கதாநாயகன், வில்லன் வேடங்களில் நடித்தார்.

தற்போதைய இளம் கதாநாயகர்களும் இரண்டு வேடங்களிலும் சேர்ந்து நடிக்க தொடங்கி உள்ளனர். ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் வந்தார். பில்லா படத்தில் அஜித்குமார் வில்லன், கதாநாயகன் ஆகிய இரண்டு வேடங்களிலும் நடித்தார். சூர்யா சமீபத்தில் வெளியான 24 படத்தில் வில்லன் மற்றும் கதாநாயகன் வேடங்களை ஏற்றார்.

விக்ரம் தற்போது நடித்து வரும் ‘இருமுகன்’ படத்தில் இரண்டு வேடங்களையும் சேர்த்து செய்கிறார். வில்லனாக அவர் வெவ்வேறு தோற்றங்களில் தோன்றும் படங்கள் வெளியாகி படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்த்தி நடித்து வரும் ‘காஷ்மோரா’ படத்தில் வில்லனும் கதாநாயகனும் அவர்தான். மொட்டை தலையுடன் படைத்தளபதியாக தோன்றும் அவரது வில்லன் தோற்றம் கடந்த வாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பல இளம் கதாநாயகர்கள் வில்லன் வேடமும் தனக்கே வேண்டும் என்று டைரக்டர்களிடம் வற்புறுத்துகிறார்கள். இது ஏற்கனவே வில்லன்களாக நடித்து வந்த நடிகர்களுக்கு சரிவை ஏற்படுத்தி உள்ளது. வில்லன் வேடங்களில் நடித்து வந்த பிரகாஷ்ராஜ், நாசர், நான் கடவுள் ராஜேந்திரன், கோட்டா சீனிவாசராவ் உள்பட பல நடிகர்கள் குணசித்திர வேடங்களுக்கு மாறி இருக்கிறார்கள்.

Related Posts