கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வனஇலாக அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போரின் போது தமது கணவன்மாரை பறிகொடுத்த நான்கு விதவைப் பெண்கள் தமது பிள்ளைகளை படிக்க வைப்பதற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் விறகு வெட்டி விற்பதற்காக சென்றுள்ளனர்.
அவர்கள் விறகுகளை வெட்டி துவிச்சக்கர வண்டியில் கட்டிக் கொண்டு வந்த போது, நெடுங்கேணியில் இருந்து வாகனம் ஒன்றில் வந்த வனஇலகா அதிகாரிகள் அவர்களை மறித்து அவர்கள் கொண்டு வந்த விறகு கட்டையால் அவர்களை தாக்கியதுடன், அவர்களது துவிச்சக்கர வண்டிகளினது காற்றுக்களையும் திறந்து விட்டுள்ளனர். அத்துடன் அருகில் இருந்த வீடுகள், கடைகளுக்கும் புகுந்து காட்டில் மரம் வெட்டீனீர்களா என சோதனை செய்து அட்டகாசம் புரிந்துள்ளதுடன், வீட்டில் இருந்த இரு ஆண்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் சிறு காயங்களுக்கு உள்ளாகிய இரு ஆண்களும் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
காட்டுப்பகுதியில் இருந்து பெரிய வாகனங்களில் பாரிய பெறுமதி மிக்க மரங்கள் வெட்டப்பட்டு வனஇலகா அதிகாரிகளின் துணையுடன் கொண்டு செல்லப்படும் அதேவேளை, பிள்ளைகளின் படிப்புக்காக போரால் பாதிக்கப்பட்ட தாம் சிறியளவில் விறகுகளை வெட்டி கொண்டு செல்ல விடாது வனஇலாகா அதிகாரிகள் அராஜகம் செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, மன்னகுளம், பெரியகுளம், புதூர்சந்தி ஆகிய பகுதிகளில் போரால் மிகவும் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த சுமார் 100 வரையான விதவைப் பெண்கள் வாழ்ந்து வருகின்றமையும் அவர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.