விரைவில் யாழ்ப்பாணத்தில் மாகாணங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி

“நானும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சதீஸ் அவர்களும் சந்தித்து இவ்வாறு ஒரு மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். அது இன்று வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது.

‘தினச்செய்தி’யின் பிரதம ஆசிரியர் திரு.கே.ரீ.இராசசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வடக்கின் வல்லவன் விளையாட்டு விழாவில் சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

k-t-rajasingam-thina-seithy

அப்பொழுது அவர் பின்வருமாறு கூறினார்.

“இந்தப்போட்டியில் பங்குபற்றிய 47 அணிகளும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் இந்தவேளையில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

விளையாட்டு என்பது வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது. விளையாடுவது என்பது அவரவர் திறமைகளை வெளிக்காட்டும் ஒரு செயற்பாடாகும். இரண்டு அணிகள் தலா 11 வீரர்கள் எதிரும் புதிருமாக நின்றுகொண்டு விளையாடுகின்றார்கள். அந்த விளையாட்டின் இலாவகத்தை பார்த்து ரசிக்க ரசிகர் கூட்டம் வருகின்றது.

இங்கு பத்தாயிரத்திற்கும் அதிகமான ரசிகர் கூட்டம் இன்று இறுதி விளையாட்டுப் போட்டியை பார்த்து ரசித்தனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வடபகுதியில் உதைபந்தாட்டப் போட்டிகளை நடாத்தி இவ்வீரர்களை இலங்கையின் தேசிய அணியில் சேர்ந்து விளையாடும் திறமையை வளர்த்துக் கொள்ள என்னால் முடிந்த சகல உதவிகளையும் செய்வேன். ஆங்கிலத்தில் சொல்வார்கள் “பயிற்சி தான் வெற்றிக்குச் சிறந்த வழி” என்று. எனவே, எமது தமிழ் இளைஞர்களும் உடலை வருத்தி பயிற்சி செய்ய முன்வரவேண்டும்.

இங்கே வருகை தந்துள்ள இந்திய துணைத்தூதுவர் திரு.ஆ.நடராஜனுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பாக்குத்தொடுவாய் நீரிணை எம்மைப் பிரித்தாலும், நாம் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டே வாழ்கின்றோம்.

எமது இந்திய துணைத்தூதுவருக்கு எமது மக்களின் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். விரைவில் இந்தியாவின் உதைபந்தாட்ட அணிகளிற் சில எமது பகுதிக்கு வந்து எமது இளைஞர்களுடன் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்குகளைச் செய்து தருமாறு எமது மக்கள் சார்பில் இந்திய துணைதூதுவர் திரு.ஆ.நடராஜன் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், இதே மைதானத்தில் மாகாணங்களுக்கு இடையிலான ஒரு போட்டியை இந்த வருடம் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகின்றேன். நீங்கள் பூரணமாக ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் தான் இந்தப் போட்டியை நடாத்த முடியும்.

இந்த விளையாட்டுப் போட்டியிலே விளையாடிய வீரர்களுக்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை என்சார்பிலும், எனது மனைவி சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த சென்மேரீஸ் அணி இன்று வடக்கின் வல்லவன் பட்டத்தைப் பெற்றுள்ளது. அவர்களுக்கு தனது கையால் எனது பாரியார் இந்த அழகான சுழல் கிண்ணத்தை வழங்குவார். அவர்களுக்கு எனது சொந்தப் பணமான இரண்டு லட்சம் ரூபாவை நானே அவர்களுக்கு வழங்குகின்றேன்.

அதே போல வெற்றி பெறும் சந்தர்ப்பத்தை இழந்த கில்லரி அணியும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களிற்கும் வெற்றிப்பரிசு ஒரு லட்சம் ரூபா இருக்கின்றது.

மூன்றாவது அணிக்கும் ஐம்பதாயிரம் ரூபா இருக்கின்றது. நான்காவது அணிக்கும் 25 ஆயிரம் ரூபா பணப்பரிசும் இருக்கின்றது.

அதுமட்டுமன்றி சுப்பர் 8 இல் விளையாடிய அனைத்து அணிகளுக்கும் பணப்பரிசு உண்டு. இந்த விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் உற்சாகமடைந்து, அவர்கள் மேலும் மேலும் இந்த விளையாட்டில் பங்குபற்றி வல்லவர்களாக வரவேண்டும் என்ற ஒரேஒரு காரணத்திற்காகத் தான் நான் இவ்வாறு பணப்பரிசில்கள் வழங்குகின்றேன்.

எனவே, இந்த விளையாட்டுப் போட்டியை இவ்வளவு தூரம் ரசித்த உங்களுக்கும் நன்றி.

இந்த விளையாட்டுப்போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பான் ஏஷியா வங்கியின் பிராந்திய முகாமையாளர் (வடக்கு – கிழக்கு) திரு.அருண் வசந்தகுமார் பீடில் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல சிறப்பு விருந்தினராக யாழ் லவ்வேஸ் கோணரின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அவர்களுக்கும் ‘தினச்செய்தி’ சார்பிலும், நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.அனுரா டி சில்வா எமது அழைப்பை ஏற்று, விளையாட்டுப்போட்டி ஆரம்பித் நாள் அன்றும் வருகை தந்து சிறப்பித்துக் கௌரவித்தார். அதேபோல இந்த விளையாட்டுப்போட்டியின் இறுதி நாளும் தனது சகாக்களுடன் வந்து எம்மைக் கௌரவப்படுத்தி, எம் முயற்சிகளைப் பாராட்டி உற்சாகப்படுத்திய அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

கடந்த 45 நாட்களாக இந்த விளையாட்டு விழா நெற்கொழு கழுகுகள் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள அயலவர்கள் எமக்கு எல்லாவிதத்திலும் ஒத்துழைப்பு தந்திருந்தனர். அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

இரவு நடுநிசி வரை விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்வாறு போட்டி நடைபெறும் போது, அவர்களிற்கு இதனால் இடர்கள் ஏற்பட்டிருந்தால் மிகவும் தாழ்மையுடனும், விநயத்துடனும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே, இந்த நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினர் இந்த விளையாட்டுப் போட்டியைப் பொறுப்பேற்று மிகவும் சிறந்த முறையில் நடாத்தி தந்தமைக்கும் அவர்களுக்கும் மிகவும் நன்றியைக் கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன்.

இவ்வாறு தனது உரையில் அவர் தெரிவித்திருந்தார்

Related Posts