விரைவில் கைதாகிறார் நாமல் ராஜபக்ச!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பணச்சலவை குற்றச்சாட்டு சம்பந்தமாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வருவதுடன் பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய பரிந்துரைக்கும் அளவிற்கு ஏதுவான காரணங்கள் இருப்பதாக பொலிஸ் உயர்மட்ட தரப்பு தகவல்கள் கூறுகின்றன. பணச்சலவை தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஊழலுக்கு எதிரான முன்னணி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் சமர்பித்துள்ளது.

அதேவேளை நாமல் ராஜபக்ச தலைமையிலான கவர்ஸ் கோப்ரேட் பிரைவட் லிமிட்டட் நிறுவனம், ஹலோ கோர்ப் நிறுவனத்தின் 125 மில்லியன் பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க கடந்த வருடம் முறைப்பாடு செய்திருந்தார். இதனிடையே வசிம் தாஜூடீன் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.

சந்தேக நபர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர் கப்டன் திஸ்ஸ உள்ளிட்ட சந்தேக நபர்கள் அதில் அடங்குகின்றனர். கொழும்பு மேலதிக நீதவான், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான அடுத்த தவணை வழக்கு விசாரணைகளுக்கு முன்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Related Posts