விருப்பு வாக்கு தொடர்பான சர்ச்சைகளை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை விருப்பு வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் அதிகளவில் அனுமதிக்க தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார்.
விருப்பு வாக்கு எண்ணுதல் தொடர்பிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கில் இவ்வாறு அதிகளவானவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதன்படி, கூடுதல் ஆசனங்களைக் கொண்ட மாவட்டங்களில் கூடுதலான கட்சிப் பிரதிநிதிகளை விருப்பு வாக்கு எண்ணுவதனை பார்வையிட அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூடுதலான ஆசனங்களைக் கொண்ட மாவட்டங்களில் ஆசனம் வென்ற அரசியல் கட்சியின் சார்பில் பார்வையிட அனுமதிக்கும் பிரதிநிதிகளின் தொகை 7லிருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குறைவான ஆசனங்களைக் கொண்ட மாவட்டங்களில் ஆசனம் வென்ற அரசியல் கட்சியின் சார்பில் பார்வையிட அனுமதிக்கும் பிரதிநிதிகளின் தொகை 5லிருந்து 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக வேட்பாளர்கள், கட்சி செயலாளர்கள், அதிகாரம் பெற்ற கட்சிப் பிரதிநிதிகள் விருப்பு வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர்.ஆசனம் பெற்றுக்கொள்ளாத அரசியல் கட்சி மற்றும் சுயாதீன கட்சிகளின் பிரதிநிதிகள் விருப்பு வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.