விருது வாங்குவதை விட கனவுக்கன்னியாக இருப்பதையே விரும்புகிறேன்

‘விருது வாங்குவதை விட, ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பதையே விரும்புகிறேன்’’ என்று நடிகை ஹன்சிகா கூறினார்.

இந்த வருடம் ஹன்சிகா நடித்து ‘அரண்மனை-2,’ ‘போக்கிரி ராஜா’ ஆகிய 2 படங்கள் இதுவரை திரைக்கு வந்துள்ளன. அடுத்து இவர் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த ‘மனிதன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி ஹன்சிகா இணையத்தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஹன்சிகா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரசிகர்கள், ‘கனவுக்கன்னி’ என்று சொல்கிற மாதிரி எல்லா படங்களிலும் காதல் நாயகியாக நடிப்பது உங்களுக்கு அலுப்பு தட்டவில்லையா, தேசிய விருது வாங்குகிற மாதிரி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இல்லையா?

பதில்:- ‘கனவுக்கன்னி’ அந்தஸ்தை பெறுவதுதான் ஒவ்வொரு கதாநாயகியின் கனவாக இருக்கும். அது கிடைக்குமா? என்று ஏங்குகிறவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அது கிடைத்ததை வரமாக கருதுகிறேன். ரசிகர்கள் என்னை, ‘‘கனவுக்கன்னி’’ என்று அழைப்பதில், வருத்தம் இல்லை. விருது நடிகை என்று சொல்வதை விட, கனவுக்கன்னியாக இருப்பதில், சந்தோஷம்தான். அதே நேரத்தில், நடிப்புக்காக விருது பெறும் கதாபாத்திரம் வந்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.

கேள்வி:- ‘நம்பர்-1’ கதாநாயகி என்ற இடத்தை பிடிக்க என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?

பதில்:- ஒரு கதாநாயகியாக நான் என் வேலையை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களை திருப்தி செய்யும் கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். ‘நம்பர்-1,’ ‘நம்பர்-2’ என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த விளையாட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது. இப்போது இருக்கிற மாதிரி எப்போதும் எனக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தால் போதும்.

கேள்வி:- உங்களுக்கு போட்டியாக யாரை கருதுகிறீர்கள்?

பதில்:- போட்டியாக யாரையும் நினைக்கவில்லை. என்னுடன் மட்டுமே நான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு படத்தை விட, இன்னொரு படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கேள்வி:- ‘மனிதன்’ படத்தில், உங்களுக்கு என்ன வேடம்?

பதில்:- பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு ஆசிரியையாக நடிக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர், ப்ரியா. இது, வழக்கமான வேடமாக இருக்காது. அழுத்தமான வேடம். இந்த படத்தை அடுத்து இப்போது ஜெயம் ரவியுடன், ‘போகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து இன்னொரு படத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கேள்வி:- ஓவிய கண்காட்சி நடத்தப் போவதாக முன்பு கூறியிருந்தீர்கள். அதை எப்போது நடத்தப் போகிறீர்கள்?

பதில்:- நான் இதுவரை 15 ஓவியங்களை வரைந்து இருக்கிறேன். கண்காட்சி நடத்த வேண்டுமானால், 50 ஓவியங்களாவது இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். ஓவியம் வரைய ஆரம்பித்தால் நான் பசி-தூக்கம் மறந்து விடுவேன். ஆறு அல்லது ஏழு மணி நேரம் தொடர்ந்து வரைந்து கொண்டிருப்பேன். அதை முடித்து விட்டுத்தான் வெளியே வருவேன்.’’

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Related Posts