கூட்டமைப்பின் புளொட் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த அரசின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராந்திய அபிவிருத்திக்கான (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சர் எஸ். விஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளநிலையில் அவருடைய கட்சி தாவலிற்கு 48 கோடி கைமாறப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தவிர்ந்த மேலும் மூவர் நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு முன்னதாக அரசுடன் இணைய தயாராக இருப்பதாக மஹிந்தவின் முன்னாள் அமைச்சர்களுள் ஒருவரான கருணா தெரிவித்துள்ளார்.
இதனிடையே கூட்டமைப்பின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில் பாய்ச்சல்கள் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே வியாழேந்திரனின் பாய்ச்சலில் சித்தார்த்தனின் ஆசீர்வாதமும் இருந்ததாக அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய வலை பதிவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே முன்னர் மஹிந்த,கோத்தபாய தரப்புக்களுடன் இணைந்து செயற்பட்டிருந்த நிலையில் கோத்தபாய நேரடியாக சித்தார்த்தனுடன் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் தொடர்ச்சியாகவே கூட்டமைப்பில் உள்ள புளொட் சார்பு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை மஹிந்த பக்கமும் தான் ரணில் பக்கமுமாக நின்று சமப்படுத்த சித்தார்த்தன் சிந்தித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே வியாழேந்திரனின் பாய்ச்சல் தொடர்பில் சித்தார்த்தன் கருத்து வெளியிட மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.