பருத்தித்துறை, வியாபாரிமூலை கிராமத்திலுள்ள வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் 23 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அருகிலுள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பருத்தித்துறை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இக்கிராமத்துக்கு பின் பகுதியில் சிறு பயிர்ச்செய்கை செய்கின்ற விவசாய காணி அமைந்துள்ளதால் வியாபாரிமூலை கிராமப் பகுதி பள்ளமாக காணப்படுகின்றது.
நீர் வடிந்தோடக்கூடிய வகையில் இந்த பிரதேசத்தில் வடிகால்கள் எவையும் கட்டித்தரப்படவில்லை என்றும், 5 வருடங்களாக இந்த நிலையில் தான் மழை காலங்களில் தாங்கள் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் ரி.ஜெயசீலனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘இந்த கிராமத்துக்கு பின் புறமாக தோட்டக்காணி காணப்படுகின்றது. அந்தப்பகுதியிலுள்ள சிலர் வெள்ளம் வெளியேறாதவாறு காணிகளை அடைத்துள்ளனர். வெள்ளம் வழிந்தோட செய்வது தொடர்பில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளருடன் நான் தொடர்புகொண்டு கேட்டபோது, கிராம அலுவலரின் உதவியுடன் மழை வெள்ளத்தை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை உடனடியாக செயற்படுத்துவதாக கூறினார்’ என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்படுகின்றது. மேலும் தேவாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 23 குடும்பங்களுக்கு மூன்று நேர சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.