வியாபாரத் திட்டங்களை எழுதி HSBC-British Council பரிசில்களை வெல்லும் வாய்ப்பு!

HSBC Youth Enterprise Awards என்ற பெயரிலான இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வியாபாரத் திட்டப் போட்டியை HSBC வங்கி மற்றும் British Council ஆகியன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்தப் போட்டியில் பங்குகொள்ள விரும்புவோர் தாம் செய்ய விரும்பும் வியாபாரத் திட்டத்தை எழுதி போட்டிக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் பரிசில்களை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

HSBC Youth Enterprise Awards

16 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்ட பட்டதாரிகள், பட்டமேற்படிப்பை மேற்கொண்டவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவொரு இலங்கையின் கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்சார் கற்கை நிறுவனங்களின் மாணவர்கள் எவரும் இந்தத் திறந்த போட்டிக்கு தமது வியாபாரத் திட்டங்களைச் சமர்ப்பிக்க முடியும் என கடந்த 13ம் திகதி British Council இல் நடைபெற்ற இந்தப் போட்டியின் அங்குரார்ப்பன நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

HSBC வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி பற்ரிக் கலகர், British Council நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளர் கீத் டேவிஸ் மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் நவரத்ன ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

போட்டியில் பங்குபெற்ற விரும்பும் மாணவர்கள் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ இந்தப் போட்டிக்கு வியாபாரத் திட்டங்களைச் சமர்ப்பிக்க முடியும். அந்தத் திட்டங்களின் வியாபார கருத்திட்டம், புத்தாக்க நோக்கு உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

போட்டியில் முதலாவது இடம் பெறும் திட்டத்துக்கு 500,000 ரூபாவும், இரண்டாமிடத்துக்கு 200,000 ரூபாவும், 3வது பரிசாக 100,000 ரூபாவும் அந்த வியாபாரத் திட்டத்தை அமுலாக்குவதற்கான ஆரம்பகட்ட நிதியாக வழங்கப்படும் என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் வெற்றிபெறுவோருக்கு தமது வியாபாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட பயிற்சியொன்று British Council நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை படிப்படியாக நடைமுறைப்படுத்தும் வகையில் வெற்றியாளருக்கான நிதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொழில்முயற்சியாண்மை வலுவுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நான்காவது வருடமாக இந்தப் போட்டி நடத்தப்படுவதாக இங்கு தெரிவித்த HSBC வங்கியின் நிறைவேற்று அதிகாரி, தமது வியாபாரத் திட்டங்களை நடைமுறை வாழ்வின் அனுபவங்களுடன் நிஜமாகவே நடைமுறைப்படுத்துவதற்கு இந்தப் போட்டி ஆர்வமும், ஆற்றலுமுள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு இப்போது தொழில் வழங்குநர்கள் அதிகம் தேவைப்படுவதாக இங்கு கூறிய உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் நவரத்ன, இதற்கு புதிய தொழில் முயற்சியாளர்கள் உருவாகுவது அவசியம் என்று தெரிவித்தார். தொழில் முயற்சியாண்மை பற்றிய விழிப்புணர்வை இளம் சந்ததியினருக்கு ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய தொழில்முயற்சியாண்மை பல்கலைக்கழக கற்கைநெறிகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியும், வேறு வகைகளிலும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவரும் British Council இந்தப் போட்டியை நடாத்துவது வரவேற்புக்குரியது என்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

Related Posts