விமான நிலைய சோதனை: இளையராஜா விளக்கம்

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனை சாதாரணமான நிகழ்வுதான் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசியுள்ள விடியோ, இணையதளங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

சோதனை ஒரு சாதாரணமான நிகழ்வுதான். பாதுகாப்புக்காகச் சோதனை செய்வது அனைத்து இடங்களிலும் நடக்கும் சாதாரண விஷயம்தான். அதை பெரிதாக எடுத்துகொள்வதில்லை. இதைவிட சித்திரவதை நடந்த விஷயங்களை எல்லாம் கடந்துள்ளேன். அதோடு ஒப்பிடும்போது, இதெல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அவர்களுடைய பணியைச் செய்யவில்லை என்றால் இந்தியா, இந்தியாவாக இருக்காது.

தேங்காய் பிரசாதம் கொண்டு சென்ற பையைத் திறக்கச் சொன்னார்கள். அவ்வளவுதான். திறந்து காட்டினேன். இதை ரசிகர்கள் பார்த்துவிட்டு, அனுதாபத்தையும், கோபத்தையும் தெரிவிக்கிறார்கள். தேவையில்லாத விஷயங்களில் தங்களது நேரத்தை ஏன் இந்தியர்கள் வீணாக்குகிறார்கள் என்பதில் பெரிய வருத்தம். ஏனென்றால் இந்தச் சோதனையை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இங்கு பணியாற்றுபவர்கள் சாப்பாட்டைப் பார்க்க முடியாது. பணிக்கு நேரத்துக்கு வர வேண்டும். அந்த மாதிரியான எரிச்சலில்கூட இருப்பார்கள். அவர்களுக்கு யார், யாரென்று தெரியாது.

“நான் எப்போதும் ராஜாதான்’: “நான் சாதாரணமானவன். எந்த இடத்தில் எப்படி நடத்துகொள்ள வேண்டுமோ, அப்படி நடக்கட்டுமே. அவர் என்னை சோதனை செய்தவுடன் பெரியவனாவதும், நான் சிறியவனாவதும் கிடையவே கிடையாது. நான் எப்போதும் ராஜாதான். அந்த இடத்தில் அவனுடைய வேலையை அவன் செய்கிறான். அதனை அனுமதிக்கிறேன். ஒத்துழைக்கிறேன். அவனும் என்னோடு சண்டையிடவில்லை. நானும் சண்டையிடவில்லை’ என இளையராஜா பேசியுள்ளார்.

Related Posts