விமான நிலையத்தில் ஐஸ்வர்யாராய்க்கு நேர்ந்த அவலம்

லண்டனில் இருந்து திரும்பிய நடிகை ஐஸ்வர்யா ராயை ரசிகர்களும், ஊடகங்களும் முற்றுகையிட்டதால் மும்பை விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அவரது தாய் கீழே விழுந்தார். மகளுக்கும் தலையில் அடி பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

aish

முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யா மற்றும் தாய் விருந்தா ராயுடன் கடந்த சில வாரங்களுக்கு முன் ஓய்விற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றிருந்தார். ஓய்வு முடிந்து இந்தியா திரும்பிய ஐஸ்வர்யா மும்பை விமான நிலையம் வந்திறங்கினார்.

வழக்கம் போல அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். கூடவே ஊடகங்களும் அவரைப் புகைப்படம் எடுக்க துரத்தினர். இதனால் பாதுகாவலர்கள் ஐஸ்வர்யாவையும், அவரது மகள் மற்றும் தாயையும் பத்திரமாக கார் அருகே அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.

ஐஸ்வர்யா ராய் காருக்கு அருகில் சென்ற போது பாதுகாவலர்கள், ரசிகர்களையும் போட்டோகிராபர்களையும் தள்ளி விட்டனர். இதில் ஒருவர் தடுமாறி ஐஸ்வர்யாராயின் தாய் மீது விழுந்தார். இதனால் விருந்தா ராய் நிலைதடுமாறி கீழே விழுந்து வலியால் அலறினார்.

மகள் ஆரத்யாவைக் காரின் பின்சீட்டில் அமர வைத்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் தாயின் அலறலால் அதிர்ச்சி அடைந்தார். தாயைப் பார்க்கும் வேகத்தில் கார் கதவை வேகமாக அவர் சாத்தினார். இதில், குழந்தை ஆரத்யாவின் தலையில் அடி பட்டது. இதனால் குழந்தையும் வீறிட்டு அழுதது.

ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகளுக்கு அடிபட்டதால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா ராய், உடனடியாக குழந்தையின் தலையை தேய்த்து விட்டுக் கொண்டே, பின்னால் திரும்பி ‘என் அம்மாவைத் தள்ளி விட்டது யார்?´ என கோபத்தில் கத்தினார்.

ஐஸ்வர்யாராய் கோபத்தை பார்த்து அதிர்ச்சியான கூட்டத்தினர் அங்கிருந்து விலகி சென்றனர். பாதுகாவலர்கள் அவரது தாயை தூக்கி விட்டனர். தாயை அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யாராய் மின்னல் வேகத்தில் காரில் ஏறி சென்று விட்டார்.

Related Posts